search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன்டாக்டர் ஜெயந்திக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி போட்ட போது எடுத்த படம்.
    X
    சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன்டாக்டர் ஜெயந்திக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி போட்ட போது எடுத்த படம்.

    தமிழகத்தில் 1,154 பேருக்கு 2-வது முறையாக கொரோனா தடுப்பூசி - 37 சதவீதம் பேர் மட்டுமே போட்டுள்ளனர்

    தமிழகத்தில் 1,154 பேருக்கு நேற்று 2-வது முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட 37 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. முதல் நாளான ஜனவரி 16-ந்தேதி 3 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பயனாளிகள், போடப்பட்ட நாளில் இருந்து 28 நாட்களில் மீண்டும் 2-வது முறை தடுப்பூசி போடவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

    அந்த வகையில் நேற்று (சனிக்கிழமை) தமிழகத்தில் 2-வது முறையாக ஏற்கனவே போட்டுக்கொண்ட பயனாளிகளுக்கு போடும் பணி நடைபெற்றது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் தேரணிராஜன், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய அரசு டாக்டர்கள் நேற்று 2-வது முறையாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2-வது முறை தடுப்பூசி போடப்படுவதை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. முதல் நாள் தடுப்பூசி போட்டுக் கொண்ட 3 ஆயிரம் பேருக்கு 2-வது முறை தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை 2.27 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சென்னையில் 30 ஆயிரத்து 345 பேரும், கோவையில் 15 ஆயிரத்து 906 பேரும், மதுரையில் 10 ஆயிரத்து 506 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

    இதுவரை தடுப்பூசி போட்டதால், 10 சதவீதம் அதாவது 13 ஆயிரத்து 191 ‘டோஸ்’ மருத்துகள் வீணாகி உள்ளது. இந்த மருந்துகள் தூக்கி எறியப்பட்டவை இல்லை. ஒரு மருந்து பாட்டிலுக்கு 10 பேர் தடுப்பூசி போட திட்டமிட்டு, பாட்டில் திறக்கப்பட்ட 4 மணி நேரத்தில் 10 பேரில் 2 பேர் வரவில்லை என்றால் அது பயன்படுத்த முடியாமல் வீணாகும். சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட20-ந்தேதி கடைசி நாள் என்பதால் இதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். முன்களப் பணியாளர்களுக்கு வரும் 17-ந்தேதி வரை முன்பதிவு செய்ய அவகாசம் உள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் முதல் முறை தடுப்பூசி போடப்பட்டு 28 நாட்கள் ஆன பின்னர் நேற்று 2-வது முறையாக 1,154 சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். கொரோனா தடுப்பூசியை தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் போட்டுக் கொள்ள விரும்பாத நிலையில், தற்போது 2-வது முறையாக 3 ஆயிரத்து 126 பேர் போட வேண்டிய நிலையில் வெறும் 1,154 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். இது 36.9 சதவீதமே ஆகும்.
    Next Story
    ×