search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நண்பரை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை- தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

    மதுபாட்டிலை உடைத்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தில் நண்பரை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு கோவங்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 45). இவரும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (38), மோகன் (45) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர்.

    கடந்த 2012-ம் ஆண்டு அந்த பகுதியில் ஒரு துக்க வீட்டுக்கு சென்றனர். அங்கு மது குடித்தபோது, ரவிக்குமார் வைத்து இருந்த மதுபாட்டிலை முருகேசன் உடைத்து விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், முருகேசனை அடித்து உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

    கடந்த 13-11-2012 அன்று மாலை 6.30 மணிக்கு ரவிக்குமார் தனது வீட்டில் இருந்து, அருகில் உள்ள கடைக்கு பீடி வாங்குவதற்கு சென்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால், அவரது மனைவி செல்லத்தாய் காய்கறி வாங்க கடைக்கு சென்றார்.

    அப்போது அங்கு வந்த முருகேசன், மோகன் ஆகிய 2 பேரும் சேர்ந்து ரவிக்குமாரை வழிமறித்து அவரது மனைவி கண்முன்னே அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

    இதுகுறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், குற்றம் சாட்டப்பட்ட முருகேசன், மோகன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கோமதி மணிகண்டன் ஆஜர் ஆனார். 
    Next Story
    ×