search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜஸ்டின்ராஜ்
    X
    ஜஸ்டின்ராஜ்

    ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட நகை பறிப்பில் ஈடுபட்ட என்ஜினீயரிங் பட்டதாரி கைது

    பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட நகை பறிப்பில் ஈடுபட்ட என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கருங்கல்:

    குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இதனால் செயின் பறிப்பில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஷ் சாஸ்திரி மேற்பார்வையில் கருங்கல் போலீஸ் இன்ஸ் பெக்டர் தங்கராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன அய்யர், ஜாண் போஸ்கோ மற்றும் போலீசார் இடம் பெற்றிருந்தனர்.

    அவர்கள் கருங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். அதனை ஓட்டிவந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் மேக்கா மண்டபம் ஈத்தவிளையை சேர்ந்த ஜாண் என்பவரின் மகன் ஜஸ்டின்ராஜ் (வயது 21) என்பது தெரியவந்தது.

    அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபாடு உள்ள அவர், நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

    வாலிபர் ஜஸ்டின்ராஜ் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்திருக்கிறார். மேலும் கூடைப்பந்து விளையாட்டில் பல்கலைக்கழக வீரராகவும் இருந்துள்ளார். ஜஸ்டின்ராஜ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். முதலில் சிறு தொகை லாபமாக கிடைத்துள்ளது.

    இதனால் அவருக்கு அந்த விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார். லாபத்தை கருதி விளையாட்டில் இறங்கிய அவருக்கு போகப்போக 2 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    எனவே அவர் வீட்டில் இருந்து சிறு தொகைகளையும், வீட்டு உபயோக பொருட்களை திருடி விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்தும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதனால் வீட்டில் உள்ளவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஜஸ்டின் ராஜுக்கு பணம் கிடைக்காமல் போனது.

    இதனால் வெறுப்படைந்த அவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு தேவையான பணத்திற்காக தனது நண்பருடன் சேர்ந்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அதில் கிடைத்த பணம் மூலம் ரம்மி விளையாடி வந்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    ஜஸ்டின்ராஜ் மீது கருங்கல், இரணியல், திருவட்டார் போலீஸ் நிலையங்களில் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. மேலும் பல்வேறு செயின் பறிப்பு முயற்சி சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    ஜஸ்டின்ராஜிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 10 பவுன் தங்கநகை மீட்கப்பட்டது. மேலும் செயின் பறிப்பில் ஈடுபட அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. ஜஸ்டின்ராஜ் மீது கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    செயின் பறிப்பில் ஈடுபட அவருக்கு துணையாக இருந்த அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்த பட்டதாரி வாலிபர், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி நகை பறிப்பில் ஈடுபட்டு தனது வாழ்க்கையை தொலைத்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×