search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய நில அளவையர் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு

    கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய நில அளவையர் உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கோவை:

    கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 62). இவர் 3 வீட்டு மனைகளை வாங்கினார். வீட்டுமனையின் பட்டா பெயர் மாற்றத்துக்காக கோவை சிங்காநல்லூரில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தை அணுகினார்.

    அவர் கடந்த 2 மாதங்களாக அலைந்தும் பட்டா பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. இது குறித்து நில அளவையர் நிர்மல்குமார் (40) என்பவரிடம் நாகராஜ் கேட்ட போது பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டதாகவும், அது தொடர்பாக அலுவலகத்தில் உள்ள நடராஜன் (62) என்பவரை சென்று சந்திக்குமாறு கூறினார்.

    இதனையடுத்து நாகராஜ், நடராஜனை சென்று சந்தித்தார். அப்போது அவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வேண்டும் அதன் பின்னர் தான் பட்டா பெயர் மாற்ற புத்தகம் வழங்கப்படும் என கூறினார். அதற்கு நாகராஜ் தன்னிடம் தற்போது பணம் இல்லை. புத்தகத்தை கொடுங்கள் நாளை வந்து பணம் தருகிறேன் என நில அளவையர் நிர்மல்குமார், நடராஜன் ஆகியோரிடம் கூறினார். இதனையடுத்து அவர்கள் பட்டா புத்தகத்தை கொடுத்தனர்.

    ரூ. 6 ஆயிரம் லஞ்சம் கேட்டது குறித்து நாகராஜ் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கணேசன், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பரிமளா தேவி, எழிலரசி, சசிலேகா ஆகியோர் ரூ. 6 ஆயிரம் பணத்தில் ரசாயன பொடி தடவி நாகராஜிடம் கொடுத்தனர்.

    நேற்று காலை இந்த பணத்துடன் நாகராஜ் கிழக்கு மண்டல அலுவலகத்துக்கு சென்றார். அங்கு இருந்து நில அளவையர் நிர்மல்குமாரை சந்தித்து பணத்தை கொடுத்தார். அவர் உதவியாளர் நடராஜனிடம் கொடுக்குமாறு கூறினார். நடராஜனும் பணத்தை வாங்காமல் பிரதீப்குமார் என்ற வாலிபரிடம் கொடுக்குமாறு கூறினார்.

    இதனையடுத்து நாகராஜ், பிரதீப்குமாரை சந்தித்து ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசர் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆனைமலையை சேர்ந்தவர் என்பதும், நீண்ட நாட்களாக நில அளவையர் நிர்மல்குமாருக்கு புரோக்கராக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நில அளவையர் நிர்மல்குமார், ஓய்வு பெற்ற மாநகராட்சி ஊழியர் நடராஜ், புரோக்கர் பிரதீப்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி சப்-ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×