search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    சேலம் தெற்கு, ஆத்தூர் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு

    திமுக கூட்டணியில் ஆத்தூர் மற்றும் சேலம் தெற்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது. அந்த தொகுதிகளை காங்கிரசுக்கு ஓதுக்கும் பட்சத்தில் மற்ற 9 தொகுதிகளிலும் திமுக போட்டியிட வாய்ப்புள்ளது.

    சேலம்:

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் அரசியல் கட்சியினர் தற்போதே சுறு சுறுப்படைந்துள்ளனர்.

    தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளன. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் தினமும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சிக்கு ஒதுக்கப்படும், யார், யாருக்கு எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து அரசியல் கட்சியினரும், பொது மக்கள் பரவலாக பேசி வருகிறார்கள்.

    எந்தெந்த தொகுதியில் போட்டியிட்டால் நமது கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்தும் அரசியல் கட்சிகளில் தலைமை கழக நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார்கள். சேலம் மாநகரில் சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, சேலம் புறநகரில் வீரபாண்டி, ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய தொகுதிகள் உள்ளன.

    இதில் தி.மு.க. கூட்டணியில் ஆத்தூர் மற்றும் சேலம் தெற்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது. அந்த தொகுதிகளை காங்கிரசுக்கு ஓதுக்கும் பட்சத்தில் மற்ற 9 தொகுதிகளிலும் தி.மு.க. போட்டியிட வாய்ப்புள்ளது. இது குறித்த கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேர்தல் தேதி அறிவித்ததும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்படும் என்பதாலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதாலும் சேலம் மாவட்ட அரசியலில் தற்போதே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    Next Story
    ×