search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலினுக்கு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் பூச்செண்டு கொடுத்து நன்றி தெரிவித்தனர்
    X
    முக ஸ்டாலினுக்கு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் பூச்செண்டு கொடுத்து நன்றி தெரிவித்தனர்

    மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் நேரில் நன்றி

    உங்களுடைய அறிவிப்பால் கடன் தள்ளுபடி உடனடியாக கிடைத்திருக்கிறது என்று மு.க.ஸ்டாலினுக்கு, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் நேரில் நன்றி தெரிவித்தனர்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சிவகங்கை எஸ்.குணசேகரன், பொதுச்செயலாளர் பி.சண்முகம், மாநில செயலாளர் வே.துரைமாணிக்கம், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில தலைவர் பி.கே.தெய்வசிகாமணி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் இளங்கீரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் அக்ரி கா.பசுமைவளவன் ஆகியோர் சந்தித்தனர்.

    இதேபோல, இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜி.எஸ்.தனபதி, தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவர் அரங்க.சங்கரய்யா, சேலம் மாவட்ட தலைவர் மு.சரவணன், விவசாயிகள் சட்ட பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் கிரிதரன், சட்ட பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அசோக் லோடா, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணகிரி கே.எம்.ராமகவுண்டர், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில துணைத்தலைவர்கள் மன்னார்குடி டி.பி.கே.ராஜேந்திரன், காஞ்சீபுரம் எழிலன், திருத்துறைப்பூண்டி சந்திரசேகர், மாநில செயலாளர்கள் திருச்சி சண்முகசுந்தரம், வேளாங்கண்ணி இளங்கோவன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் அக்ரி.முருகானந்தம் ஆகியோரும் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

    அப்போது மு.க.ஸ்டாலினிடம், “அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு”வினர் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்த பருவ ஆண்டில் பெய்த பெருமழையால் விவசாயிகள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பருவத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் அறுவடை செய்யும் காலத்தில் வெள்ளத்தில் மூழ்கி, தமிழகம் முழுவதும் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இந்த சமயத்தில், விவசாயிகள் நிர்கதியாக கைவிடப்பட்ட நிலையில், கூட்டுறவு கடன்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாயக்கடன்கள் என முழுமையாக தள்ளுபடி செய்து, இழப்பீடு வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்து பல போராட்டங்களை நடத்தினார்கள்.

    இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சி தலைவராகிய நீங்கள், விவசாயிகள் மீது கொண்ட அன்பால், “நான் ஆட்சிக்கு வந்த உடன் விவசாயிகள் பெற்ற கடன் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்வேன்” என்று அறிவித்தீர்கள். இது விவசாயிகளுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரை வாய்மூடி இருந்த தமிழக அரசின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலை கருத்தில் கொண்டு, விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

    எப்படியோ இன்னும் சில மாதங்களில் விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய கடன் தள்ளுபடி பலன், தங்களின் அறிவிப்பால் உடனடியாக கிடைத்திருக்கிறது. இதனால், லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களால் பலன் அடைந்திருக்கிறார்கள். அதற்காக தமிழக விவசாயிகளின் சார்பில் தங்களுக்கு (மு.க.ஸ்டாலினுக்கு) நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×