search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேசிலைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோளான அமசோனியா-1
    X
    பிரேசிலைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோளான அமசோனியா-1

    பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டில் பிரேசில் நாட்டு செயற்கைக்கோள்: 28-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

    பிரேசில் நாட்டு முதன்மை செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வருகிற 28-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.
    சென்னை:

    அமேசான் காடுகள் அழிப்பை கண்காணிப்பதற்காக தயாரிக்கப்பட்ட பிரேசில் நாட்டு முதன்மை செயற்கைக்கோளுடன், இந்தியாவை சேர்ந்த மேலும் 20 செயற்கைக்கோளை பொருத்தி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வருகிற 28-ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு எதிர்பார்த்தபடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தடங்கல் ஏற்பட்டு வந்தது.

    தற்போது பல்வேறு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இஸ்ரோ தன்னுடைய பணியில் முழுவீச்சில் இறங்கி உள்ளது. அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான முதல் ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வருகிற 28-ந்தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வருகிற 28-ந்தேதி காலை 10.23 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. பூமியில் இருந்து 752 கி.மீ. தூரத்தில் புவிவட்டப்பாதையில் இந்த செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட்டில், பிரேசிலைச் சேர்ந்த அமசோனியா-1 என்ற முதன்மை செயற்கைக்கோளுடன், இந்தியாவை சேர்ந்த 20 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

    இதில் இஸ்ரோவுக்கான ஐ.என்.எஸ்.-2டிடி, இன்ஸ்பேஸ் சேர்ந்த ஜெ.ஐ.டி. சாட், ஜி.எச்.ஆர்.சி.இ. சாட், ஸ்ரீசக்தி சாட் ஆகிய 3 பல்கலைக்கழக செயற்கைகோள்கள் மற்றும் சதீஷ் தவான் சாட் இதுதவிர நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் 15 செயற்கைக்கோள்கள் அடங்கும்.

    அமசோனியா-1 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இந்த செயற்கைகோள் அமேசான் பிராந்தியத்தில் காடுகள் அழிப்பை கண்காணிப்பதற்கும், பன்முகப்படுத்தப்பட்ட விவசாயத்தை பகுப்பாய்வு செய்வதற்கும், பயனாளிகளுக்கு தொலை உணர்வு தரவுகளை வழங்குவதன் மூலம் தற்போது இருக்கும் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த இந்த செயற்கைக்கோள் உதவும்.

    தற்போது விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. ராக்கெட் 53-வது ராக்கெட்டாகும். மத்திய அரசின் இந்திய விண்வெளித்துறையின் கீழ் செயல்படும் நியுஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான முதல் வணிக ராக்கெட்டாகும்.

    இந்த நிறுவனம் விண்வெளித்துறையில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள ‘ஸ்பேஸ் பிலைட் இன்க்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து வணிக ஏற்பாட்டின் கீழ் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
    Next Story
    ×