search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொல்.திருமாவளவன் பேசிய காட்சி.
    X
    தொல்.திருமாவளவன் பேசிய காட்சி.

    கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க திருமாவளவனுக்கு முழு அதிகாரம்- விசிக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

    கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க முழுமையான அதிகாரம் திருமாவளவனுக்கு அளிக்கப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கிவிட்டன. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுடைய நிர்வாகிகள் குழு கூட்டத்தை கூட்டி ஆலோசித்து வருகின்றனர். அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் சென்னை செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெறுவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முழுமையான அர்ப்பணிப்போடு தீவிரமாக பணியாற்றுவது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

    * கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் மேற்கொள்வதற்கு கட்சி தலைவர் திருமாவளவனுக்கு இந்த செயற்குழு முழுமையான அதிகாரத்தை அளிக்கிறது.
     சிறப்பு செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.
    * ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டு இனஅழித்தொழிப்பு மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் உரிய அழுத்தம் தரவேண்டும் என்றும்; இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் இணைந்ததே ஒருங்கிணைந்த தமிழர் தாயகம் என்று இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலைபாட்டை இந்திய அரசு தொடர்ந்து இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

    * எஸ்.சி., எஸ்.டி. மக்களின் மக்கள் தொகைக்கேற்ப நிதி ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை பின்பற்றவேண்டும் என்றும், அவர்களுக்கு சட்டப்படி அளிக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க முன்வர வேண்டும்.

    * மூன்று மாதங்களாக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை இந்த செயற்குழு முழுமையாக, வலுவாக ஆதரிக்கிறது. பிரதமர் மோடி கவுரவம் பார்க்காமல் மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் திரும்பபெற முன்வரவேண்டும்.

    * பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளநிலையில் அங்கு உறுதியாக வாதாடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத்தருமாறும், முறையாக விடுதலை செய்யப்படும்வரை இந்த 7 பேருக்கும் பரோல் வழங்குமாறும் தமிழக அரசை இந்த செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

    * தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேர்வுமுறை மாற்றப்பட வேண்டும் என்பது உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×