search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்
    X
    எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்

    சசிகலா வருகை- அதிமுக நிர்வாகிகளுடன் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

    வருகிற 8-ந்தேதி சசிகலா சென்னை வர உள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். இதையொட்டி அவர் கடந்த டிசம்பர் மாதமே பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

    ஒவ்வொரு மாவட்டமாக பிரசாரம் செய்து வரும் அவர் போரூரில் நாளை பிரசாரத்தை தொடங்கி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பேசுகிறார்.

    இந்த நிலையில் சசிகலா வருகிற 8-ந்தேதி சென்னைக்கு வருவதையொட்டி அ.தி.மு.க.வில் சலசலப்பு உருவாவதை தடுக்கும் வகையில் ஆலோசிப்பதற்காக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு தொலைபேசி வாயிலாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி அனைத்து மாவட்ட செயலாளர்களும் அவசரம் அவசரமாக சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோர் பங்கேற்று மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    இந்த கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் அமைப்பு செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டுமானப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளதால் சென்னை வரும் சசிகலா ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு வந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து அ.ம.மு.க. கட்சி நிர்வாகிகள் சசிகலாவை பார்க்க சென்னைக்கு 8-ந்தேதி அதிகளவில் வர உள்ளதால் அ.தி.மு.க. தொண்டர்களையும் அன்றைய தினம் தலைமை கழகத்துக்கு வரவழைக்கலாமா? என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பிரச்சனை மட்டுமின்றி கட்சி வி‌ஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது பற்றியும் இதில் பேசப்படுகிறது.

    அ.தி.மு.க. பூத் கமிட்டி அளவில் வீடு வீடாக வாக்காளர்கள் சரி பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழக மூத்த நிர்வாகி கூறியதாவது:-

    தேர்தல் நெருங்குவதால் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. அதற்காக இன்று தலைமை கழகத்தில் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. இதில் உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறியப்படுகிறது.

    பூத் கமிட்டி செயல்பாடு குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும். 75 பேர் கொண்ட கமிட்டி ஒவ்வொரு கிளையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 50 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த வீடுகளுக்கு சென்று அ.தி.மு.க.வின் சாதனைகளை எடுத்து சொல்வது இவர்களது பணியாகும். இந்த பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட உள்ளன.

    சசிகலா அ.தி.மு.க.வில் இப்போது உறுப்பினராக கூட இல்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். இப்போது தொண்டர்கள் சசிகலாவுக்கு எதிராகவே உள்ளனர். எனவே அவரை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னைக்கு சசிகலா வருகிற 8-ந்தேதி வர உள்ள நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    Next Story
    ×