
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை கலெக்டர் சந்தீப்நந்தூரி போட்டுக் கொண்டார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி போட்டுக் கொண்டார்.
முன்னதாக அவருக்கு உடல் வெப்பம், ரத்த அழுத்தம் மற்றும் பல்சோமீட்டர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கணினியில் ஆன்லைன் மூலம் விவரங்கள் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த தடுப்பூசி போடுவதற்கு 10 ஆயிரம் நபர்கள் பதிவு செய்து தற்போது வரை 2500 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் உத்தரவின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் பணியாற்றிய வருவாய்த் துறை, காவல் துறை, உள்ளாட்சித் துறை உட்பட மற்ற துறைகளில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவு கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி வருவாய்த் துறை சார்பாக நானும் தடுப்பூசி போட்டு கொண்டேன். இந்த தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 30 நிமிடங்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. இதுவரை யாருக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படவில்லை. இந்த நல்ல வாய்ப்பினை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என முதல் கட்டமாக 6 இடங்களில் போடப்பட்டு வந்தது. தற்போது 24 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி டீன் திருமால்பாபு, டாக்டர்கள் ஷகீல்அகமது, ஸ்ரீதர், நலப்பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை இயக்குனர் அஜிதா ஆகியோர் உடனிருந்தனர்.