search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ரூ.20 ஆயிரம் பணம் கேட்ட ஆடியோ விவகாரம்: மின் அதிகாரி, அலுவலர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது

    டிஜிட்டல் உலகில் ரகசியம் என்று ஒன்றுமில்லை. தவறு செய்யும் அதிகாரி எவ்வளவு அதிகாரம் படைத்தவராக இருந்தாலும் ஒரு பாமரன் நினைத்தால் கூட தண்டிக்க முடியும் என்பதற்கு சாட்சியாக கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
    கோவை:

    கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி தனது கட்டிடத்துக்கு வர்த்தக மின் இணைப்பு பெற மின் உரிம ஒப்பந்ததாரரிடம் சென்றார். அவர் ஆவணங்களை ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து ரூ.4,500 கட்டணம் பெற்றார். பின்னர் அந்த பகுதியைச் சேர்ந்த உதவி மின் பொறியாளர் கட்டிடத்தை நேரில் பார்வையிட்டார்.

    ஆனால் வெகுநாட்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து, மின் இணைப்பு வழங்க உதவி மின் பொறியாளருக்கு ரூ.2 ஆயிரம் பணம் தர வேண்டும் என ஒப்பந்ததாரர் கூறியுள்ளார். அதன்படி தொழிலாளி பணத்தைக் கொடுத்துள்ளார். அதன் பிறகும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து உதவி மின் பொறியாளரை சந்தித்து மின் இணைப்பு வழங்குமாறு தொழிலாளி வலியுறுத்தியுள்ளார். அப்போது இது குறித்து புரோக்கர் ஒருவரை சந்தித்து பேசுமாறு அதிகாரி கூறினார்.

    அதன்படி புரோக்கரிடம் தொழிலாளி பேசியபோது, உதவி மின் பொறியாளருக்கு ரூ.20 ஆயிரமும், லைன் மேன், போர்மேன்களுக்குத் தனியாகவும் பணம் கொடுத்தால் காதும் காதும் வைச்ச மாதிரி வேலையை முடிக்கலாம் என்று 3 நிமிடம் 8 செகண்டு உரையாடல் நடந்தது.

    லஞ்சம் கேட்ட உரையாடலை தொழிலாளி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். லஞ்சம் கேட்ட ஆடியோ கோவை முழுவதும் பரவியது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

    இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது இதில் சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரி மற்றும் அலுவலர்கள் மீது விரைவில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    கோவையில் பல இடங்களில் மின் இணைப்பு, மின்வயர் பழுதுஉள்ளிட்ட பணிகளை செய்ய அலுவலர்கள் சர்வ சாதாரணமாக லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் குமுறுகின்றனர். உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×