என் மலர்

  செய்திகள்

  மனு
  X
  மனு

  சப்-இன்ஸ்பெக்டர் கொலை: கைதான மெக்கானிக்கை காவலில் எடுக்க ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் மனு தாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லோடு ஆட்டோ ஏற்றி சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்த வழக்கில் கைதான மெக்கானிக்கை காவலில் எடுக்க ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  ஏரல்:

  தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது55). ஏரல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

  ஏரல் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு ஒரு தள்ளுவண்டி கடையில் கொற்கை விலக்கு பகுதியை சேர்ந்த மெக்கானிக்கான முருகவேல் என்பவர் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தார்.

  இதையறிந்த பாலு மற்றும் போலீசார் அங்கு சென்று முருகவேலை கண்டித்து அனுப்பி வைத்தனர். பின்னர் மீண்டும் அருகில் உள்ள மற்றொரு கடையில் முருகவேல் தகராறு செய்தார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரது லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து விட்டு காலையில் விசாரணைக்கு வருமாறு முருகவேலை அனுப்பினர்.

  பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் ஏட்டு பொன் சுப்பையா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் நள்ளிரவு ரோந்து பணிக்கு சென்றனர்.

  தன்னை பலர் முன்னிலையில் கண்டித்ததால் ஆத்திரத்தில் இருந்த முருகவேல் தனது நண்பரின் லோடு ஆட்டோ மூலம் போலீசார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இந்த விபத்தில் பாலு உயிரிழந்தார். ஏட்டு பொன்சுப்பையாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.

  பலியான சப்-இன்ஸ்பெக்டர் பாலு உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது சொந்த கிராமமான முடிவைத் தானேந்ததலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

  அங்கு அவரது உடலுக்கு தென்மண்டல ஐ.ஜி. முருகன், நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது. பின்னர் தென்மண்டல ஐ.ஜி. முருகன் கூறியதாவது:-

  குடிபோதையில் தொடர்ந்து தகராறு செய்த முருகவேலை கண்டித்த சப்-இன்ஸ்பெக்டரை லோடு ஆட்டோவை ஏற்றி கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட முருகவேல் மீது கொலை, கொலை முயற்சி, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  முதற்கட்ட பிரேத பரிசோதனை தகவலின் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட பாலுவின் உடலில் அதிக அளவிலான உள் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை முற்றிலும் உள் நோக்கத்துடன் நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  முருகவேலை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தும் போது மேலும் தகவல்கள் தெரியவரும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  கொலை தொடர்பாக 10 தனிப்படைகள் தேடி வந்த நிலையில் மெக்கானிக் முருகவேல் நேற்று விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

  அவரை வருகிற 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  இந்நிலையில் சிறையில் உள்ள மெக்கானிக் முருகவேலை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக மனு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் இன்று அல்லது நாளை மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
  Next Story
  ×