search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    அடுத்தகட்ட போராட்டத்தை நானே களமிறங்கி நடத்துவேன்- ராமதாஸ் அறிவிப்பு

    வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை நானே களமிறங்கி நடத்துவேன் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2 மாதங்கள், 6 கட்டப் போராட்டங்கள், 9 நாட்கள் போராட்டக் களத்தில். ஒவ்வொரு நாளும் போராட்டக்களத்திற்கு திரண்டு வந்த சத்திரிய சொந்தங்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் கூடுதல். தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் வன்னியர் உள் இடபங்கீடாக தளர்த்தி கொள்ளப்பட்ட கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க.வும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டுப் போராட்டம் குறித்த வர்ணனை தான் மேற்கண்ட வரிகள். அது வர்ணனை மட்டுமல்ல. உண்மையும் கூட.

    கடந்த டிசம்பர் 1-ந்தேதி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் முதல் கட்டப் போராட்டம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் 14-ந்தேதி போராட்டம், 23-ந்தேதி பேரூராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம், 30-ந்தேதி ஒவ்வொரு ஒன்றியத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன் போராட்டம், ஜனவரி 7-ந்தேதி நகராட்சி அலுவலகங்கள் முன் போராட்டம் என நமது போராட்டங்கள் தொடர்ந்தன. அவற்றின் தொடர்ச்சியாக 29-ந்தேதி 38 மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் மக்கள்திரள் போராட்டங்கள் நடத்தப்பட்டு, மாவட்ட கலெக்டர்களிடம் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.

    தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயங்களின் நலனுக்காகவும் பா.ம.க.வும், வன்னியர் சங்கமும் போராடி வருகின்றன என்பதற்கான அங்கீகாரத்தை 29-ந்தேதி நடந்த போராட்டத்தில் அனைத்து சமுதாயங்களும் நமக்கு வழங்கின. போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று, அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளிலுள்ள வன்னியர் சொந்தங்களும் எனது அழைப்பை ஏற்று தங்களின் கட்சிக்கொடி ஏந்தி சமூக உரிமைக்காக போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் கொடுத்தனர். அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

    மொத்தத்தில் இதுவரை நாம் நடத்திய 6 கட்ட போராட்டங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளன. இந்த போராட்டங்கள் சத்திரியர்களாகிய உங்கள் வீரத்தையும், கொள்கை உறுதியையும், துணிச்சலையும் வெளிப்படுத்தியுள்ளன. இந்த போராட்டங்களின் மூலம் நீங்கள் யார்? என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    அதேநேரத்தில் அதிகாரப்பூர்வ போராட்டத்தை இன்னும் நாம் தொடங்கவில்லை. நாம் அளித்த லட்சக்கணக்கான மனுக்கள் மீது முதல்-அமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்று நான் நம்புகிறேன். நாம் நடத்திய 6 கட்ட போராட்டங்களும் நமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்கனவே அனைவருக்கும் உணர்த்தி விட்டன. இந்த உண்மைகள் எல்லாம் அரசுக்கு தெரியாமல் இருக்காது. நமது போராட்டத்தின் நியாயத்தை தமிழக அரசும் உணர்ந்திருப்பதை அறிய முடிகிறது.

    ஆகவே, நமது கோரிக்கையை தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும். அதனால் சத்திரியப் போராட்டத்திற்கு தேவை இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன். அதையும் மீறி சத்திரியர்களின் குணத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டால், அது சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். அந்த போராட்டத்தை நானே களமிறங்கி தலைமையேற்று நடத்துவேன். அதற்காக காத்திருங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×