search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கண்டக்டர் மீது தாக்குதல்- தனியார் பஸ் டிரைவர்கள் சாலைமறியல்

    திண்டிவனத்தில் கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தனியார் பஸ் டிரைவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திண்டிவனம்:

    புதுவையில் இருந்து திண்டிவனத்துக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் கொந்தமூர் வழியாக செல்கிறது. அவ்வாறு செல்லும் தனியார் பஸ்கள் பயணிகளை பாலத்தின் மேல் பகுதியில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறார்கள்.

    ஆனால் கொந்தமூர் கிராம மக்கள் தனியார் பஸ்கள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக வந்து பயணிகளை இறக்கிவிட வேண்டும் என்று கூறி வந்தனர். ஆனால் தனியார் பஸ்கள் பாலத்தின் மேல் பகுதியில் நின்று பயணிகளை இறக்கி விடுவது வாடிக்கையாக உள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் கடந்த 15-ந் தேதி தனியார் பஸ் டிரைவர்- கண்டக்டரை தாக்கி உள்ளனர். பிரச்சனை பெரிய அளவில் வருவதற்குள் கிராம பெரியவர்கள் சமரசம் செய்து முடித்தனர்.

    நேற்று இரவு புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. கொந்தாமூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது பஸ்சில் இருந்த 3 பேர் திடீரென எழுந்து கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார்.

    இதனால் மோதல் வெடித்தது. ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் கண்டக்டர் மீது சரமாரியாக தாக்கினார். இதில் அவர் காயம் அடைந்தார்.

    உடனடியாக பஸ் திண்டிவனத்துக்கு வந்தது. அப்போது அந்த மர்ம நபர்கள் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீபோல பரவியது. வெகுண்டெழுந்த தனியார் பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் இன்று காலை ஒன்று சேர்ந்தனர். அவர்கள் திண்டிவனத்தில் பஸ்களை நடுரோட்டில் நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் ஒரே இடத்தில் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த வழியாகதான் சென்னை- திண்டிவனம் மார்க்கத்துக்கும், சென்னை- விழுப்புரம் மார்க்கத்துக்கும், திண்டிவனம்- புதுவை மார்க்கத்துக்கும் செல்ல முடியும்.

    ஒட்டுமொத்தமாக பஸ்கள் அணிவகுத்து நின்றதால் மற்ற பஸ்கள் எங்கும் செல்ல முடியாமல் அப்படியே நின்றன. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    தகவல் அறிந்த திண்டிவனம் போலீஸ் டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மறியல் செய்த தனியார் பஸ் கண்டக்டர்- டிரைவர்களிடம் சம்பவம் நடந்த இடம் கிளியனூர் பகுதியாகும். எனவே அங்குள்ள போலீசில் புகார் செய்யுங்கள். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதனை தொடர்ந்து மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×