என் மலர்

  செய்திகள்

  முக அழகிரி
  X
  முக அழகிரி

  இன்று 70-வது பிறந்தநாள்: தொண்டர்கள் சந்திப்பை தவிர்த்த மு.க.அழகிரி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இன்று பிறந்தநாளை கொண்டாடும் மு.க.அழகிரி தொண்டர்கள் சந்திப்பை தவிர்த்து விட்டார்.
  மதுரை:

  முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. தென்மண்டல அமைப்பு செயலாளருமாக இருந்தவர் மு.க.அழகிரி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

  பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க.வுக்கு எதிராக ஆதரவாளர்களை பணி செய்ய உத்தரவிட்டார். இதனால் மீண்டும் மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க தொடர்ந்து எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

  இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டினார் மு.க.அழகிரி. அதில் பேசிய அவரது ஆதரவாளர்கள், நமது பலத்தை தி.மு.க. மேலிடத்திற்கு புரியவைக்கும் வகையில் அடுத்தக்கட்ட முடிவை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

  அப்போது பேசிய மு.க.அழகிரி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்ததுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

  இதனால் அவரது ஆதரவாளர்கள் புதிய கட்சி குறித்த அறிவிப்பு அவரது பிறந்தநாளான இன்று (30-ந்தேதி) வெளியிடுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இன்று 70-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை எளிமையாக தனது குடும்பத்தாருடன் கொண்டாடினார் மு.க.அழகிரி.

  வழக்கமாக ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் மதுரையில் அவரது ஆதரவாளர்கள் பிரமாண்ட விழா எடுப்பார்கள். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், எழுச்சிமிக வரவேற்பு என்று மதுரையே அமர்க்களப்படும் அளவுக்கு மு.க.அழகிரி பிறந்தநாள் விழா கொண்டாடப்படும்.

  அவரது தந்தை கருணாநிதி மறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார்.

  ஆனால் இந்த ஆண்டு பிறந்தநாளின்போது முக்கிய முடிவை அறிவிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 3-வது ஆண்டாக பிறந்தநாளில் தொண்டர்களையும், ஆதரவாளர்கள் சந்திப்பையும் மு.க.அழகிரி தவிர்த்துள்ளார்.

  அவரது முக்கிய ஆதரவாளர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சில ஆதரவாளர்கள் மதுரையில் பொதுமக்களுக்கு இனிப்புகள், இலவச வேட்டி- சேலைகள் ஆகியவற்றை வழங்கி மு.க.அழகிரி பிறந்த நாளை கொண்டாடினர்.

  பிறந்தநாளின்போது தொண்டர்கள் சந்திப்பை தவிர்த்தது குறித்து மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது:-

  அண்ணன் மு.க.அழகிரி எதையும் சிந்தித்து நிதானமாக முடிவு எடுப்பதில் வல்லவர். சில நாட்களுக்கு முன்பு எதிர்கால நிலைபாடு குறித்து ஆதரவாளர்களை அழைத்து பேசினார். அப்போது அவரவர் கருத்துக்களை அண்ணனிடம் தெரிவித்துள்ளோம். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் புதிய அரசியல் கட்சி என்பது ஒரு சவாலான காரியம்.

  நடிகர் ரஜினிகாந்தே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டபோது, நாமும் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர். மேலும் நாம் ஒரு அரசியல் முடிவு எடுக்கும்போது நமது முழு பலத்தையும் காட்டுவதாக இருக்க வேண்டும். எனவே புதிய கட்சி குறித்து அவசரம் காட்ட வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

  எனவே அண்ணன் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் பம்பரமாக சுழன்று பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தோம். அனைவரது கருத்தையும் கேட்டுக்கொண்ட அண்ணன் மு.க.அழகிரி தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பதாக கூறி உள்ளார்.

  இப்போது அவர் அறிவிக்காவிட்டாலும் இன்னும் சில வாரங்களில் தனது எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து அறிவிப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.

  ஆனாலும் பா.ஜனதா உள்ளிட்ட திராவிட இயக்கத்திற்கு எதிரான கட்சிகளை அவர் ஆதரிக்க மாட்டார். தலைவர் கலைஞரின் பிள்ளை அவர். எனவே அண்ணன் மு.க.அழகிரியின் நடவடிக்கையை புரிந்து கொண்டு தி.மு.க. மேலிடம் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  மு.க.அழகிரி பிறந்த நாளையொட்டி மதுரையில் அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் மு.க.அழகிரியை வாழ்த்தியும், தி.மு.க.வில் அவரை சேர்க்க கோரிக்கை வைக்கும் வகையிலும் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர்.
  Next Story
  ×