search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை

    தேனி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போடி:

    போடியை அடுத்த சூலப்புரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் வாசிமலை (வயது 40). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (35). இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் இந்திராணி மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது இந்திராணி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்திராணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கம்பம் ஆங்கூர்பாளையம் சாலை தெருவை சேர்ந்தவர் பெத்தபெருமாள் (69). இவர், சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருடைய மனைவி திலகம் கோவிலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்தபோது பெத்த பெருமாள் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த பவுன் மகன் முருகேசன் (32). கூலித்தொழிலாளி. இவருடைய பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இவருடைய அண்ணன் செல்லப்பா (42) அல்லிநகரம் கீரைக்கல் பஜார் தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு செல்லப்பா தனது தம்பியை பார்ப்பதற்காக அவருடைய வீட்டுக்கு வந்தார்.

    அப்போது அங்கு முருகேசன் தூக்கில் பிணமாக தொங்கினார். முருகேசனுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. தனக்கு திருமணம் செய்ய பெண் பார்க்குமாறு அவர் தனது அண்ணனிடம் கூறி வந்துள்ளார். மதுபழக்கத்தை நிறுத்தினால் பெண் பார்ப்பதாக செல்லப்பா கூறியதாக தெரிகிறது. ஆனால், மது பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் முருகேசன் தற்கொலை செய்து இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×