search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சங்கரன்கோவில் அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்து சிறுவன் பலி

    சங்கரன்கோவிலில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்து சிறுவன் பலியானான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் செபஸ்டியன் (வயது 31). இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கற்பகம். இவர் அங்குள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 6 வயது, 4 வயதில் 2 மகள்களும், ஆரோன்தாஸ் (2½) என்ற மகனும் இருந்தனர். கணவன்-மனைவி ஆகிய 2 பேரும் வேலைக்கு செல்வதால், அவர்கள் தங்களுடைய 3 குழந்தைகளையும் வீட்டில் தனியாக விட்டு சென்றனர்.

    நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கணவனும், மனைவியும் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். எனவே வீட்டில் 3 குழந்தைகளும் தனியாக இருந்தனர். அப்போது 2 மகள்களும் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். இளைய மகன் ஆரோன்தாஸ் வீட்டுக்குள் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவன், வீட்டில் தண்ணீர் இருந்த வாளிக்குள் எதிர்பாராதவிதமாக தலைகுப்புற தவறி விழுந்தான்.

    இதற்கிடையே மதிய உணவு இடைவேளையில் கற்பகம் தன்னுடைய குழந்தைகளை பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்றார். அப்போது ஆரோன்தாஸ் வாளிக்குள் தலைகுப்புற கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

    உடனே அவனை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஆரோன்தாஸ் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரன்கோவிலில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×