search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களால் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது- ஓ.பன்னீர்செல்வம்

    ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களால் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
    சென்னை:

    லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். அவை அனைத்தும் தொலைநோக்கு திட்டங்கள் ஆகும். அந்த திட்டங்கள் நாட்டு மக்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதற்கும், பொருளாதாரம் உயர்ந்த நிலையை அடைவதற்கும் பயன்பட்டன.

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தார். தொலைநோக்கு திட்டம் 2023 என்பதை ஜெயலலிதா ஏற்கனவே நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

    100 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற சந்ததிகளும் திட்டத்தின் பயனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் புரட்சித்தலைவி அம்மா பார்த்து பார்த்து செய்தார்.

    தொழிற்சாலைகள் நிறுவுவதிலும், வேளாண்மை புரட்சி செய்வதிலும், மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரங்களை பயன்படுத்தினார். கல்வியில் சிறந்த சாதனைகளை படைத்தார். 2011-ம் ஆண்டு முதல் ரூ.35 ஆயிரம் கோடி நிதியை கல்வித்துறைக்கு ஒதுக்கினார்.

    அம்மாவின் சிலை உயர் கல்விமன்றத்தில் அமைக்கப்பட்டு இருப்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். இது வரலாற்றில் பதிவு செய்யப்படும். மாணவர்களை படிக்க வைப்பதில் முனைப்பு காட்டியது அம்மாவின் அரசுதான். ஆரம்ப கல்வியில் இருந்து உயர்கல்வி வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இலவச பாட புத்தகங்கள், இலவச சீருடை, இலவச காலணிகள், இலவச சைக்கிள் என வருடத்துக்கு 16 வகையான உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினார்.

    கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல வேலைக்கு செல்லும்போது அவர்களின் குடும்ப வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கும் என்று அம்மா கருதினார். அம்மாவின் சாதனையால் இந்தியா முழுவதும் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் 50 சதவீதத்தை தாண்டி தமிழகத்தில் இருக்கிறார்கள்.

    பல கல்லூரிகள் அம்மாவின் ஆட்சி காலத்தில் தான் உருவாக்கப்பட்டன. அதனால் பட்டதாரிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிக அளவு உயர்ந்துள்ளது. படித்த மாணவ செல்வங்களின் எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் அம்மா வகுத்த அடிப்படை தான்.

    அதை இன்றைக்கு அப்படியே தமிழக அரசை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்துகொண்டு இருக்கிறார்.

    அம்மா வந்த பாதையை பின்பற்றி கல்வித்துறையில் நாம் இன்று ஒரு நிலையான, உறுதியான நிலையை எட்டி இருக்கிறோம். அம்மா விட்டு சென்ற பணியை தமிழக அரசு தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறது. அதனால் தான் தமிழகம் மற்ற மாநிலங்களை விட அனைத்து துறைகளிலும் முதன்மையாக இருக்கிறது. இதற்கு அம்மாவின் தியாக வாழ்வு தான் காரணம் என்று வரலாறு சொல்லும் அளவுக்கு நாம் செய்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×