search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் பாதை
    X
    மெட்ரோ ரெயில் பாதை

    வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் பாதையை ஆய்வு செய்ய பாதுகாப்பு ஆணையர் சென்னை வருகை

    வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோநகர் இடையே நடந்து முடிந்துள்ள மெட்ரோ ரெயில் பாதையை ஆய்வு செய்ய பாதுகாப்பு ஆணையர் வருகிற 31-ந்தேதி சென்னை வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    சென்னை:

    சென்னையில் வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயிலுக்கான விரிவாக்கப்பணிகளை, கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதில், சுரங்கப்பாதையில் தியாகராஜர் கல்லூரி, தண்டையார்பேட்டை ஆகிய இரண்டு ரெயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் புதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், விம்கோநகர் ஆகிய 6 மெட்ரோ ரெயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 770 கோடி மதிப்பில் மெட்ரோ ரெயில் சேவைக்கான 2 ரெயில் பாதைகள், ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முற்றிலுமாக நிறைவடைந்து விட்டது.

    இதனை தொடர்ந்து வருகிற 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பாதுகாப்பு ஆணையர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வருகை தருகிறார். அவரை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனர் பிரதீப் யாதவ் வரவேற்கிறார்.

    பிப்ரவரி 3-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னையில் தங்கி இருந்து வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை ஆய்வு செய்கிறார்.

    இதனை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்க விருப்பப்பட்டு கடந்த 19-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமரை சந்தித்து சென்னைக்கு வரும்படி அழைப்பு விடுத்து வந்தார். அவர், சென்னை வந்து ரெயில் போக்குவரத்து திறந்து வைக்கிறாரா? அல்லது டெல்லியில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்கிறாரா? என்று இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    இவ்வாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

    Next Story
    ×