search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுரங்கப்பாலம் மண் மேடாகி பாதசாரிகள் பயன்படுத்தசிரமப்படும் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    சுரங்கப்பாலம் மண் மேடாகி பாதசாரிகள் பயன்படுத்தசிரமப்படும் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

    திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலைய சுரங்கப்பாலத்தை சீரமைக்க கோரிக்கை

    திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையம் அருகில் உள்ள சுரங்க பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் ராயபுரம் செல்லும் சாலையில் ரெயில்வே போலீஸ் நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகில் ஒரு சுரங்கப்பாலம் அமைந்துள்ளது. ராயபுரம், புஷ்பா ரவுண்டான பகுதியை இணைக்கும் வகையில் உள்ள இந்த சுரங்க பாலத்தை அப்பகுதியினர் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஜெய்வாபாய் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவிகளும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது அந்த பாலம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. மழைக்காலங்களில் இந்த பாலத்தில் அதிகளவு மழை நீர் தேங்கும். பின்னர் தண்ணீர் வடியும் நிலையில் மழைநீரில் அடித்து வரும் மண் மற்றும் சகதி ஆகியவை பாலத்தின் அடியில் 1 அடி உயரத்துக்கும் அதிகமாக தேங்கி தற்போது மண் மேடாகி உள்ளது. இதனால் பாலத்தின் உயரம் குறைந்து நடந்து செல்லும் பொதுமக்கள் குனிந்து கொண்டே செல்லும் நிலை உள்ளது.

    மேலும், இந்த பாலப் பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின் போது அள்ளப்படும் மண் மற்றும் கட்டிட கழிவுகளும் இப்பகுதியில் கொட்டப்படுவதால் பாதசாரிகளுக்கு மேலும் சிரமம் ஏற்படுகிறது.

    குறிப்பாக இரவு நேரங்களில் இப்பகுதியில் போதிய மின் விளக்குகள் வசதியும் இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு சுற்றித்திரியும் மதுப்பிரியர்கள், சமூக விரோதிகளால் பெண்கள் அச்சத்துடனேயே கடந்து செல்லும் நிலை உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    திருப்பூர் ராயபுரம் பகுதியையும் புஷ்பா ரவுண்டானா பகுதியையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த சுரங்க பாலத்தை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த பாலத்தில் மண் அதிகளவில் தேங்கி மேடாகி உள்ளது. இதனால் சுரங்க பாலத்தை குனிந்து கொண்டே கடந்து செல்ல வேண்டியுள்ளது.

    மேலும் இப்பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்கு தோண்டப்பட்ட பள்ளங்களும் சரிவர மூடப்படாமல் உள்ளது. ரெயில்வே போலீஸ் நிலைய வாயிலில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. பொதுமக்களுக்கு பெரிதும் பயன் அளிக்கம் வகையில் உள்ள இந்த சுரங்க பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்த பாலத்தின் அடியில் படிந்துள்ள மண்ணை அகற்றி, இப்பகுதியில் போதிய மின் விளக்குகள் வசதியை ஏற்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் இங்கு போலீசார் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×