search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் - துணை முதலமைச்சர் மரியாதை
    X
    ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் - துணை முதலமைச்சர் மரியாதை

    ஜெயலலிதா நினைவிடம் திறப்பு- வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்பு

    மெரினா கடற்கரையில் காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடற்கரை முழுவதும் திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளமாகவே காட்சி அளிக்கிறது.
    சென்னை:

    சென்னை மெரினாவில் இன்று நடைபெற்ற ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து பங்கேற்றனர்.

    சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் நேற்று காலையிலேயே சென்னைக்கு புறப்பட்டனர்.

    இவர்களில் பெரும்பாலானோர் நேற்று இரவே சென்னையை வந்தடைந்தனர். இன்று அதிகாலை வரையில் வாகனங்களில் அ.தி.மு.க.வினர் வந்து கொண்டே இருந்தனர்.

    இவர்கள் அனைவரும் இன்று காலை 5 மணியில் இருந்தே மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் குவிய தொடங்கினர்.

    இதனால் காலையிலேயே மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே சென்றது. காலை 11 மணி அளவில் மெரினா கடற்கரையே திக்கு முக்காடும் அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

    இன்று காலை 6 மணியில் இருந்து மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போர் நினைவு சின்னத்தில் இருந்து கண்ணகி சிலை வரையில் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மெரினா கடற்கரை முழுவதும் திரும்பிய திசையெல்லாம் மக்கள் வெள்ளமாகவே காட்சி அளிக்கிறது.

    வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் பலர் தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளோடு குடும்பத்துடன் வந்திருந்தனர். மெரினா கடற்கரையை சுற்றி பார்த்துவிட்டு இவர்கள் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

    ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது பிரசாரத்தின்போது அழைப்பு விடுத்து இருந்தார். இதனை ஏற்று பொதுமக்களும் இன்று நடந்த ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் ஏராளமாக கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளோடு பொதுமக்களும் அதிக அளவில் பங்கேற்றதால் மெரினா கடற்கரை குலுங்கியது. கூட்ட நெரிசலில் திணறியது.

    கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு மெரினாவை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் மெரினாவுக்கு நடந்தே சென்றனர்.

    சிவானந்தா சாலை வழியாகவும், மெரினாவுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்தவர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தன.

    சிவானந்தா சாலை வழியாகவும் அ.தி.மு.க.வினர் மெரினா கடற்கரை நோக்கி நடந்து சென்றனர்.

    சென்னையில் பல இடங்களில் இருந்தும் பஸ் மற்றும் வேன்களில் புறப்பட்டு சென்ற அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா நினைவிட நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    நினைவிட திறப்பு விழாவுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் மெரினா கடற்கரை களையுடன் காணப்பட்டது.

    அண்ணா சதுக்கம் அருகில் இருந்த பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் அருகில் மாற்றப்பட்டு இருந்தது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் திருப்பி விடப்பட்டு ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    இதுபோன்று அடையாறு பகுதியில் இருந்து மெரினா வழியாக செல்ல வேண்டிய வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தன.


    Next Story
    ×