search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்திய காட்சி.
    X
    ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்திய காட்சி.

    ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரும்போது வீரம் பிறக்கும்- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

    ஜெயலலிதா நினைவிடத்துக்கு வரும் போதெல்லாம் வீரம் பிறக்கும், நெஞ்சில் ஈரம் சுரக்கும் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.

    சென்னை:

    ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு இந்த பிறவி மட்டுமல்ல இன்னும் ஏழு எட்டு பிறவி எடுத்தாலும் தீர்க்க முடியாத நன்றி கடன் பட்டிருக்கின்றோம். என்றென்றும் நினைவில் வைத்து கொண்டாடும் அளவுக்கு அம்மாவுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்.

    அம்மா வகுத்த திட்டங்களால் தனது வாழ்வை நிலை நிறுத்த தமிழக மக்களும், அம்மா மீட்டு தந்த ஜீவாதார உரிமைகளை மீண்டும் தனதாக்கி கொண்ட தமிழகமும் அந்த நன்றியை மறக்காது. அந்த நன்றி உணர்வுக்கு எடுத்துக் காட்டாகதான் நமது இயக்கத்தின் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அருகே அமைக்கப்பட்டு திறக்கப்பட்டு இருக்கும் அம்மா நினைவிடம் ஆகும் என்பதை கூறி கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்.

    அரசு சார்பாக நினைவிடம் என்று குறிப்பிட்டாலும் கழக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் அம்மாவின் நினைவலைகள் இது என்பது இன்றைய வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது.

    நாங்கள் மட்டுமல்ல, இளைஞர்கள், இளம்பெண்கள் ஏன் இளைய தலைமுறைகளும், எதிர்கால சந்ததிகளும் வந்து வணங்கி ஆசி பெற்று தங்களது வாழ்வில் முன்னேற உத்வேகம் பெறும் ஆலயமாக அம்மாவின் ஆலயம் இன்றைக்கு அமைந்து இருக்கிறது.

    அம்மாவுக்கு விசுவாசமாக தொண்டர்களாகிய நாம் இதயத்தில் கோவில் கட்டி வைத்து இருந்தோம். அந்த இதயகோவில்தான் இன்று நினைவிடமாக உருமாறி இருக்கிறது.

    இதுவெறும் நினைவிடம் அல்ல. உண்மை ஒளிவீசும் இடம், நேர்மை ஒளி வீசும் இடம், வாய்மை ஒளி வீசும் இடம், சத்தியம் ஓளி வீசும் இடம், சாதனைகள் ஓளிவீசும் இடம்.

    தமிழ்நாட்டில் தீய சக்திகள் தலைஎடுத்து விடாமல் இருப்பதற்காக தினமும் உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு உரைக்கும் இடம். ஓய்வு இல்லாமல் உழைத்து உழைத்து தமிழக மக்களை உயர்த்தி விட்ட மனித தெய்வம் இங்கே உறங்கி கொண்டிருக்கிறது.

    கழகத்துக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும், அத்தனையையும் தாங்கி வெற்றிகளை குவித்த இதய தெய்வம் இங்கே உறங்கி கொண்டிருக்கிறது.

    உண்மை, உழைப்பு, உயர்வு என்ற தாரக மந்திரம் இங்கு ஒலித்துக்கொண்டிருக்கிறது. மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வீரவணக்கம் இங்கே கேட்டு கொண்டிருக்கிறது.

    அம்மா என்ற மூன்று எழுத்து நம்முடைய உயிர் எழுத்து. எதிரிகளுக்கு அது ஆயுத எழுத்து. இந்த நினைவிடத்துக்கு வரும் போதெல்லாம் வீரம் பிறக்கும், நெஞ்சில் ஈரம் சுரக்கும்.

    அம்மாவின் புன்னகை முகம் நினைவுக்கு வரும். தாயே நீங்கள் எங்களோடு இல்லையே என்று கண்ணீர் பெருகும். அம்மா நீங்கள் தமிழக மக்கள் மீது செலுத்திய அன்பு இன்னும் மறையவில்லை. எக்காலமும் மறையவே மறையாது. விசுவாச தொண்டர்கள் மீது காட்டிய பாசம் இன்னும் மறையவில்லை. எதிரிகளை வென்றெடுத்த வீரம் இன்னும் மறையவில்லை. தாய்குலத்தின் மீது நீங்கள் காட்டிய அக்கறை இன்னும் மறையவில்லை.

    இவை அத்தனைக்கும் இந்த நினைவிடம் வீற்றிருப்பது தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம். தமிழினத்துக்கு கிடைத்த தங்க புதையல். ஏழை எளியோருக்கு கிடைத்த அட்சய பாத்திரம். அதனால்தான் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும். என்றும் இங்கே குழுமி இருக்கும் உங்கள் ஆன்மா எங்களுக்கு துணை இருக்கும் அம்மா.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×