search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    தமிழகம் முழுவதும் மருத்துவ பணியாளர்களின் தயக்கத்தை போக்க தடுப்பூசி பயன்களை விளக்கி விழிப்புணர்வு

    தமிழகம் முழுவதும் மருத்துவ பணியாளர்களின் தயக்கத்தை போக்க தடுப்பூசி பயன்களை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரத் துறை அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் முதல் கட்டமாக 6 லட்சம் சுகாதார முன்களப்பணியாளர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 10 நாட்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் நேற்று முன்தினம் வரை 69 ஆயிரத்து 27 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். நேற்று 4,926 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அத்துடன் மொத்தம் 73,953 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    எதிர்பார்த்த அளவைவிட குறைந்த அளவிலேயே முன்களப்பணியாளர்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். மருத்துவத்துறையை சேர்ந்த அதிகாரிகள், முதல்வர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு தயக்கத்தை நீக்கி வருகிறார்கள். ஆனாலும் சுகாதார பணியாளர்கள் ஆர்வம் காட்டவில்லை.

    இதனால் சுகாதாரத் துறை அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி மருத்துவ பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    நேற்று வரை 72,253 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் 1700 பேருக்கு கோவேக்ஷின் தடுப்பூசியும் மொத்தம் 73,953 பேருக்கு போடப்பட்டுள்ளது.

    தடுப்பூசி போடச் சொல்லி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்கள் விருப்பத்துடன் தான் போட வேண்டும். தடுப்பூசியின் பயன்களை மருத்துவ ஊழியர்களுக்கு விளக்கி கூறி புரிய வைக்க வேண்டும்.

    இது பாதுகாப்பானது. இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்று எடுத்துக் கூறி முன்களப்பணியாளர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

    இது குறித்து அனைத்து மாவட்டத்திலும் இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை முன்களப்பணியாளர்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×