search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவக்குமார்
    X
    சிவக்குமார்

    தாராபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.1 லட்சம் பறிப்பு

    தாராபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை மதுபாட்டிலால் தாக்கி ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 310-ஐ பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
    தாராபுரம்:

    தாராபுரம் அருகே டாஸ்மாக் ஊழியரை மதுபாட்டிலால் தாக்கி ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 310-ஐ பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). இவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்து, தச்சன்புதூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வழக்கம்போல விற்பனையை முடித்துகொண்டு டாஸ்மாக் கடையை சிவக்குமார் பூட்டினார். அதனைத்தொடர்ந்து கடையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததற்கான தொகை ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 310-த்தை தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் ஒரு பையில் வைத்துக்கொண்டு தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    தச்சன்புதூர்-பொள்ளாச்சி சாலை சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது 3 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சிவக்குமாரை வழிமறித்தது. உடனே சிவக்குமார் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அந்த ஆசாமிகள் சிவக்குமாரிடம் உள்ள பணத்தை கொடுக்குமாறு கேட்டனர். அதற்கு சிவக்குமார் மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த 3 மர்ம ஆசாமிகளும் அருகில் கிடந்த மதுபாட்டில்களை எடுத்து சிவக்குமார் தலையில் தாக்கினர். இதில் சிவக்குமார் நிலைகுலைந்ததை அடுத்து அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 310-ஐ பையுடன் பறித்துச்சென்று விட்டனர்.

    இதுபற்றி சிவக்குமார் தனது செல்போன் மூலம் தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தலையில் பலத்த காயத்துடன் இருந்த சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

    சம்பவம் குறித்து தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×