search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கடை பணியாளர்கள் பயோமெட்ரிக் எந்திரத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    ரேஷன் கடை பணியாளர்கள் பயோமெட்ரிக் எந்திரத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    ரேஷன்கடை பணியாளர்கள் பயோமெட்ரிக் எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டம்

    கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் பயோமெட்ரிக் எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே ஸ்கேனிங் முறையில் பொருட்களை ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வந்தனர். தற்போது, கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால், பயோமெட்ரிக் பதிவு செய்யப்படும் எந்திரத்தில் 2ஜிக்கான சிம்கார்டு என்பதால், இணையதள வேகம் குறைவாக உள்ளது. எனவே குடும்ப அட்டை தாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதில் காலவிரயம் ஏற்படுவதுடன், கடைக்கு வருபவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை வருகிறது. சிலர் தங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என ரேஷன் கடை பணியாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    எனவே விரல் ரேகையை பதிவு செய்யும் முறையை வேகப்படுத்தும் வகையில் 4ஜி முறையிலான இணையதளவழியை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும், தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் கைவிரல் ரேகை பதிவின் மூலம் தொற்று பரவும் நிலையும் ஏற்படுகிறது.

    ஆகையால், கண்விழிதிரை ஸ்கேனிங் அடிப்படையில் விற்பனை செய்ய ஆவண செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பலக்கட்ட போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.

    அந்த வகையில் நேற்று, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு பயோமெட்ரிக் (போஸ்) எந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் ஏழுமலை, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் மாவட்ட மகளிரணி தலைவர் ஜெகதீஸ்வரி மற்றும் விற்பனையாளர்கள் கோவிந்தராஜ், பிரான்ஸ், பிரபு, ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய அவர்கள், பின்னர் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
    Next Story
    ×