search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    வாக்காளர் பட்டியலில் இந்தி எழுத்துக்கள் திமுக புகார்

    ஆத்தூர், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பாக கலெக்டரிடம், தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் விஜயலட்சுமியிடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 20-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நகலை நாங்கள் ஆய்வு செய்தோம். அதில் ஆத்தூர், நிலக்கோட்டை தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது.

    அதாவது, வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது. ஒரே வாக்காளர்களுக்கு 2, 3 பதிவுகள் இருக்கின்றன.

    இறந்து போன சிலரின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. மேலும் வாக்காளரின் பெயர் விவரங்கள் இந்தி, ஆங்கில மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளதை பார்க்கும் போது, மத்திய அரசு மறைமுகமாக இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்க முயற்சிக்கிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது.

    மத்திய அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. மேலும் தேர்தல் ஆணையமும் இதனை கண்டுகொள்ளாமல் அச்சிட்டு உள்ளது. எனவே வாக்காளர் பட்டியல் விவரங்களில் அச்சிடப்பட்டுள்ள இந்தி மொழியை நீக்கிவிட்டு தமிழ், ஆங்கில மொழிகளில் அச்சிட மாவட்ட தேர்தல் அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

    மேலும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை களைந்து புதிதாக பட்டியல் வெளியிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் இந்தி எழுத்துக்கள் இடம்பெற்றிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×