search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் விழிப்புணர்வு தபால் அட்டையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட போது எடுத்த படம்.
    X
    வாக்காளர் விழிப்புணர்வு தபால் அட்டையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட போது எடுத்த படம்.

    தானியங்கி எந்திரம் மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறும் திட்டம் - கவர்னர் தொடங்கி வைத்தார்

    கலெக்டர் அலுவலகங்களில் தானியங்கி எந்திரம் மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெறும் திட்டத்தை தமிழக கவர்னர் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில் நேற்று தேசிய வாக்காளர் தினம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

    இதில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரவேற்றார். தலைமை செயலாளர் கே.சண்முகம், மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு தேர்தல் ஆணையத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நிறுவப்பட உள்ள தானியங்கி எந்திரம் மூலம் புதிய வாக்காளர்கள், வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர்கள், புதிதாக வாக்காளர் அடையாள அட்டையை பெற விரும்புபவர்கள் ‘எலக்ட்ரானிக்’ முறையில் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து புதிய வாக்காளர்கள் 2 பேர் மேடையில் அமைக்கப்பட்டிருந்த தானியங்கி எந்திரத்தில் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டனர்.

    வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. உதவி தேர்தல் அதிகாரிகளான சப்-கலெக்டர்கள், வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு நினைவுப்பரிசு, பாராட்டு சான்றிதழும், தேர்தல் விழிப்புணர்வு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தபால் அட்டையையும், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டையும் கவர்னர் வெளியிட்டார்.

    விழாவில் கவர்னர் பேசியதாவது:-

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்திய தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் எந்திரம் ஆகியவற்றை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி வருகிற 31-ந் தேதிக்குள் நிறைவு பெற்று விடும்.

    கொரோனா பரவலை தடுப்பதற்காக சமூக இடைவெளியை பின்பற்றும் பொருட்டு ஒரு வாக்குச்சாவடியில் 1,500 பேர் வாக்களிக்கலாம் என்பதை மாற்றி ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கூடுதலாக 23 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் விதமாக 18 வயதுக்கு மேற்பட்ட 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது பிரதிநிதிகளை தேர்வு செய்யும் அதிகாரம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை பொறுப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி வி.ராஜாராமன், சென்னை கலெக்டர் சீதாலட்சுமி, முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில், சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ் நன்றி கூறினார்.
    Next Story
    ×