search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கார் மோதி பலி: சென்னை டாக்டர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    கார் மோதி சென்னை டாக்டர் பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை:

    திருச்செந்தூர் தேரிகுடியிருப்பை சேர்ந்தவர் டாக்டர் உமா சங்கர் (வயது 54). இவர் சென்னையில் சென்னை ஆஸ்பத்திரி என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்தி வந்தார்.

    ஆஸ்பத்திரியை விரிவுபடுத்த விரும்பிய டாக்டர் கோவையில் மேலும் ஒரு ஆஸ்பத்திரி நடத்த முடிவு செய்தார். அதன்படி கோவை 100 அடி ரோடு சந்திப்பு சக்திரோட்டில் உள்ள எல்லன் ஆஸ்பத்திரியை தேர்ந்தெடுத்தார். இந்த ஆஸ்பத்திரியின் உரிமையாளர் டாக்டர் ராமச்சந்திரனிடம்(77) கோவையில் ஆஸ்பத்திரி நடத்தும் தனது விருப்பத்தை டாக்டர் உமாசங்கர் கூறினார். எல்லன் ஆஸ்பத்திரியை தொடர்ந்து நடத்த முடியாமல் இருந்த டாக்டர் ராமச்சந்திரன் தனது ஆஸ்பத்திரியை மாத வாடகைக்கு பயன்படுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்தார். அதன்படி மாத வாடகை ரூ.15 லட்சமும், ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீத வாடகை உயர்வு செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி 2017-ம் ஆண்டில் இருந்து டாக்டர் உமாசங்கர் சென்னை ஆஸ்பத்திரி என்ற பெயரிலேயே ஆஸ்பத்திரி நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் வாடகை தொடர்பாக கடந்த ஆண்டு பிரச்சினை எழுந்தது. இதனையடுத்து டாக்டர் ராமச்சந்திரன் தனது ஆஸ்பத்திரிக்கு வாடகை தராமல் ஆஸ்பத்திரியை அபகரிக்க டாக்டர் உமாசங்கர் முயற்சி செய்கிறார் என்றும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் உமாசங்கரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த டாக்டர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று காலை டாக்டர் உமாசங்கர் ரத்தினபுரி அருகே கண்ணப்பன் நகரில் உள்ள ஒரு கார் ஒர்க்ஷாப்பில் தனது காரை நிறுத்தினார். பின்னர் அங்குள்ள ஏ.டி.எம். சென்டருக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியே வேகமாக வந்த கார் டாக்டர் உமாசங்கர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.

    இந்த தகவல் அறிந்ததும் துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான டாக்டர் உமாசங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துவிபத்து வழக்காக பதிவு செய்தனர். விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்று காலை குவிந்த உறவினர், நண்பர்கள் 300-க்கும் மேற்பட்டோர் டாக்டர் உமாசங்கர் கார் விபத்தில் சாகவில்லை. கார் ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்று கையில் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இறந்த டாக்டர் உமா சங்கருக்கு ரேவதி என்ற மனைவியும், தினகரன் என்ற மகனும், மைதிலி என்ற மகளும் உள்ளனர். பிள்ளைகள் 2 பேரும் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    Next Story
    ×