search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் டி.ஜெயக்குமார்
    X
    அமைச்சர் டி.ஜெயக்குமார்

    மு.க.ஸ்டாலினே போட்டியிட்டாலும் ராயபுரம் தொகுதியில் தி.மு.க. டெபாசிட் இழக்கும் -ஜெயக்குமார்

    மு.க.ஸ்டாலினே போட்டியிட்டாலும் சரி ராயபுரம் தொகுதியில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறேன் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    சென்னை:

    ராயபுரம் தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டதால்தான் டி.ஜெயக்குமார் வெற்றி பெற முடிந்தது. வரும் தேர்தலில் சாதாரண தொண்டரை நிறுத்தி அ.தி.மு.க.வை தோற்கடிப்போம் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

    தேர்தல் நேரங்களில் கூட்டணிகள் அமைக்கப்படும் போது எந்ததெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என்பது அடிப்படை நடைமுறை. இதை எல்லா கட்சிகளும் பின்பற்றித்தான் தேர்தலை சந்திக்கும். அந்த அடிப்படையில் கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு ராயபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கலாம்.

    ஆனால் அந்த கூட்டணி மரபுகளை கூட தி.மு.க. மதிப்பதில்லை என்பதுதான் தெரியவந்துள்ளது. ஒரு வகையில் இது காங்கிரசை அவமதிப்பதுதான். ஆனால் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வின் காலடியில் வாய்மூடி மவுனமாக தவம் கிடக்கிறது.

    இது அவர்களுடைய உள்கட்சி மற்றும் கூட்டணி பிரச்சினை. அதற்குள் போக நான் விரும்பவில்லை.

    ஆனால் ராயபுரம் தொகுதியின் நிலவரம், கடந்த கால தேர்தல் வரலாறுகளை தெரியாமல் தி.மு.க.வினர் பேசுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.

    1991- தேர்தலில் என்னை எதிர்த்து தி.மு.க.தானே போட்டியிட்டது. அப்போது ஏன் வெற்றி பெறவில்லை?

    அதேபோல் 2001, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் தொடர்ச்சியாக தி.மு.க. தானே எதிர்த்து போட்டியிட்டது. ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லையே, ஏன்?

    இந்த தேர்தலிலும் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறேன். வேண்டுமானால் மு.க.ஸ்டாலின் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.

    நான் அவரைப் போல் தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவதில்லை. இந்த தொகுதியை பொறுத்த வரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மீது உயிரையே வைத்திருப்பவர்கள். அவர்கள் கை காட்டிய என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

    அந்த நம்பிக்கையோடு மக்கள் மத்தியில் அன்று முதல் இன்றுவரை தொண்டாற்றி வருகிறேன். அந்த அடிப்படையில் சொல்கிறேன் வருகிற தேர்தலில் இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் யார் போட்டியிட்டாலும் டெபாசிட் பறிபோகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×