search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தேர்தலுக்காகவே மு.க.ஸ்டாலின் ‘வேல்’ பிடித்துள்ளார்- எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

    கோவை மாவட்ட மக்கள் குடிநீர் தேவையை போக்க கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    கோவை:

    ‘வெற்றி நடைபோடும் தமிழகம்’ என்ற பெயரில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் கோவையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இன்று 2-வது நாளாக கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் அந்த பகுதியில் கூடியிருந்த மக்களிடையே அவர் பேசியதாவது:-

    தேர்தல் நேரம் வந்து விட்டதால் ஸ்டாலின் வேலை கையில் எடுத்துள்ளார். யார் எல்லாம் கடவுளை இழிவாக பேசினார்களோ. அவர்கள் எல்லாம் இன்று வேலை கையில் எடுத்து காட்சி தருகின்றனர்.

    இவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே கடவுளை நினைப்பவர்கள். ஆனால் நாம் எல்லாம் இறைவனை பக்தியோடு தினமும் பிரார்த்தனை செய்கிறோம். நல்லது நடக்க வேண்டும் என நினைக்கிறோம்.

    ஆனால் ஸ்டாலின் பேசுவது ஒன்று அவருக்குள் இருப்பது ஒன்று. நீங்கள் முருகனின் வேலை பெற்று விட்டால் மட்டும் அவர் வரம் கொடுக்க மாட்டார். அவர் வரம் கொடுப்பது அ.தி.மு.க கட்சிக்கு தான்.

    ஏனென்றால் முருக பக்தர்கள் தைப்பூசத்திற்கு முருகன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். அதனால் அன்றைய தினத்தை பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று விடுமுறை அளித்துள்ள அரசு அ.தி.மு.க அரசு தான்.

    அ.தி.மு.க. எல்லா மதத்தினரையும் சமமாகவே பார்த்து வருகிறது. தி.மு.க அப்படி கிடையாது. அவர்கள் தேர்தல் வந்து விட்டதால் பகல் வே‌ஷம் போடுகிறார்கள்.

    அதன் காரணமாகவே மு.க.ஸ்டாலினுக்கு வேல் கண்ணுக்கு தெரிகிறது. அதற்கு முன்னதாக வேல் எங்கிருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லையா?.

    ஆகவே கடவுள் உரிய நேரத்தில் உரிய தண்டனையை நிச்சயமாக தேர்தல் மூலம் மு.க.ஸ்டாலினுக்கு கொடுப்பார்.

    அ.தி.மு.க அரசு கோவை மாவட்டத்திற்கு மகளிர் கலை அறிவியல் கல்லூரி, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள், குடிநீர் பற்றாக்குறையை போக்க கூட்டு குடிநீர்திட்டம் உள்பட எண்ணற்ற பல திட்டங்களை கொடுத்துள்ளோம். கல்விக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி ஏழை மாணவர்களும் உயர் கல்வி படிக்க இந்த அரசு வழிவகை செய்துள்ளது.

    பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலணி, விலையில்லா புத்தகம், பேக் போன்றவற்றை வழங்கியுள்ளோம். ஏழை மாணவர்களும் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதற்காக 7.5 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்துள்ளோம். அதன் மூலம் 332 பேர் டாக்டருக்கு சேர்ந்து படித்து வருகிறார்கள்.

    ஏழை மக்களும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக ரூ.2 லட்சமாக இருந்த காப்பீடு திட்டத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளோம். கோவை மாவட்ட மக்கள் குடிநீர் தேவையை போக்க கூட்டு குடிநீர் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளோம்.

    அதேபோல் ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கு இதுவரை ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. அதனையும் தற்போது ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்கி வருகிறோம். அ.தி.மு.க. அரசு மக்களை நேசிக்கும் அரசு. அவர்களது எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசு.

    குறிப்பாக சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது. ஆகவே மக்கள் உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×