search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மத்திய அரசின் மதுரை மண்டல தொழிலாளர் கமிஷனர் கைது

    மத்திய அரசின் மதுரை மண்டல தொழிலாளர் கமிஷனர் சிவராஜன் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    மத்திய அரசின் மதுரை மண்டல தொழிலாளர் கமிஷனராக இருப்பவர் சிவராஜன். இவருடைய கட்டுப்பாட்டில் கோவை, ஈரோடு உள்பட மாவட்ட அலுவலகங்கள் உள்ளன. இந்தநிலையில் கோவையைச் சேர்ந்த பைப் தயாரிப்பு நிறுவனம் தொழிலாளர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளது. உடனடியாக உரிமம் வழங்க வேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று சிவராஜன் கேட்டுள்ளார். அதற்கு அந்த நிறுவனமும் சம்மதம் தெரிவித்துவிட்டது.

    சிவராஜனுக்கு சென்னையில் வீடு உள்ளது. இந்தநிலையில் சென்னை வந்திருந்த அவர், லஞ்ச பணத்தை அண்ணாநகரில் உள்ள ஓட்டலுக்கு வந்து தரும்படி கேட்டுள்ளார். அதன்படி அந்த நிறுவனத்தின் கணக்காளர் குறிப்பிட்ட ஓட்டலுக்கு பணத்துடன் வந்தார். உரிமம் வழங்க சிவராஜன் லஞ்சம் பெறப்போகும் தகவலை சி.பி.ஐ. அதிகாரிகள் எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டனர். இதையடுத்து லஞ்ச பணத்தை சிவராஜன் வாங்கியபோது அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    லஞ்சம் வழங்கிய குற்றத்துக்காக, பைப் நிறுவனத்தின் கணக்காளரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் 2 பேரிடமும் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள சிவராஜனின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அவருடைய அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இந்த கைது நடவடிக்கை குறித்து சி.பி.ஐ. தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
    Next Story
    ×