search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பழனி அருகே ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு -பள்ளிக்கூடம் மூடல்

    பழனி அருகே பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர் பணியாற்றிய பள்ளிக்கூடம் மூடப்பட்டது.
    நெய்க்காரப்பட்டி:

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதற்கிடையே தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் முக கவசம் அணிந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஆசிரியை ஒருவர், பழனி அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சில நாட்களுக்கு முன்பு வேலை தொடர்பாக வெளியூர் சென்று வந்தார். அப்போது அவருக்கு காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தது. அடுத்த சில நாட்களில் ஆசிரியை மற்றும் அவரது மகனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகும் அந்த ஆசிரியை பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்தார்.

    இதற்கிடையே அந்த ஆசிரியை மற்றும் அவரது கணவர், மகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது குறித்து அறிந்த சுகாதாரத்துறையினர், அவர் பணியாற்றிய பள்ளிக்கூடத்தை மூடினர். மேலும் அந்த பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பணியாற்றும் 9 ஆசிரியர்கள், 20 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
    Next Story
    ×