search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக
    X
    திமுக

    234 தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்- தி.மு.க.வின் அடுத்த அதிரடி திட்டம்

    மக்கள் கிராமசபை கூட்டத்தை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க தி.மு.க.வுக்கு புதுப்புது வியூகங்களை ஐபேக் நிறுவனம் வகுத்து கொடுத்து வருகிறது.

    கடந்த 2 மாதமாக தமிழகம் முழுவதும் மக்கள் கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். கிராமப் பகுதிகளில் கட்சியினரையும், பொதுமக்களையும் திரட்டி பிரமாண்ட மேடை, மின்விளக்கு அலங்காரங்கள் எதுவும் இல்லாமல் மக்கள் மத்தியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாடும் வகையில் இந்த கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

    தேர்தல் பிரசாரங்களில் வேன்களில் செல்லும் போதும் மக்களுடனான இடைவெளி அதிகமாக இருக்கும். ஆனால் இந்த கூட்டங்கள் மூலம் மக்களுடன் மக்களாக தலைவர்கள் கலந்து உரையாடியதால் இடைவெளி குறைந்ததோடு மக்களுடனான நெருக்கம் அதிகரித்தது. இது கட்சியின் வெற்றிக்கு சிறந்த அடித்தளமாக அமைந்து இருப்பதாக கருதப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் 16,500 மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 21 ஆயிரத்து 500 கூட்டங்கள் நடத்தி உள்ளனர். இதன்மூலம் ஒரு கோடியே 5 லட்சம் பேரை சந்தித்துள்ளதாக கணக்கிட்டுள்ளனர். இதில் 80 லட்சம் பேர் நேரடியாகவும், 25 லட்சம் பேர் இணைய தளங்கள் வழியாகவும் கலந்து இருக்கிறார்கள்.

    மக்கள் கிராம சபையின் நிறைவு கூட்டம் இன்று மாலையில் மதுரவாயலில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 25 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் வகையில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு சினிமா பின்னணி பாடகர்கள் அந்தோணிதாஸ், மாலதி ஆகியோரின் கிராமிய இசைப்பாடல் நிகழ்ச்சி நடக்கிறது.

    மு.க.ஸ்டாலின்

    அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராமசபை கூட்டங்களின் நிறைவு கூட்டத்தை நிறைவு செய்து வைத்து மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

    தொடர்ந்து மக்கள் சந்திப்புக்கான அடுத்த அதிரடி திட்டத்தையும் தி.மு.க. தயார் செய்துள்ளது. இதன்படி மாவட்டந்தோறும் 234 சட்டசபை தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இதை நாளை மறுநாள் (25-ந்தேதி) கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்தில் முறைப்படி அறிவித்து மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    முதல் கூட்டம் 29 ந்-தேதி (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலையில் நடக்கிறது.

    இந்த கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் 6 மணி வரையும் நடத்தப்படும். கட்சி அலுவலகங்கள் அல்லது மண்டபங்களில் நடத்தப்படும்.

    இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடர்பாக உதாரணமாக பட்டா, முதியோர், விதவை உதவி தொகைகள், திருமண உதவித் திட்டங்கள், சாலைவசதி, தெருவிளக்கு, குடிநீர் போன்ற பொதுவான அடிப்படை பிரச்சனைகள் பற்றி மனு கொடுக்கலாம். அந்த மனுக்களை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை சீட்டும் வழங்கப்படும். அதற்காக கம்ப்யூட்டர்களுடன் பணியாளர்கள் இருப்பார்கள்.

    பின்னர் அந்த மனுக்களை துறைவாரியாக பிரித்து தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சிறப்பு திட்டங்கள் அமலாக்கம் என்ற பெயரில் தனியாக ஒரு அமைச்சர் தலைமையில் நிறைவேற்றி கொடுக்கும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×