search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாமக
    X
    பாமக

    தனித்து களம் இறங்க தயாராகும் பாமக: அதிமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்படாததால் முடிவு

    கோரிக்கைகள் அனைத்தையும் அ.தி.மு.க. தரப்பில் ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற பாமகவினர் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி நிர்வாக குழுவில் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    சென்னை:

    அ.தி.மு.க- பா.ம.க. கூட்டணியை உறுதிப்படுத்துவதில் இழுபறி தொடர்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி சேர்ந்தது.

    அப்போது செய்து கொண்ட உடன்பாட்டின் படி அடுத்து வந்த சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் பா.ம.க. போட்டியிடவில்லை.

    சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்துவதில் அ.தி.மு.க. ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் பா.ம.க. சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் இதுவரை உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    மேலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு டாக்டர் ராமதாஸ் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார். ஏற்கனவே 5 கட்ட போராட்டங்களை நடத்தி இருக்கும் நிலையில் வருகிற 29-ந்தேதி மீண்டும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    பா.ம.க.வின் இட ஒதுக்கீடு போராட்டம் அ.தி.மு.க.வில் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து இரண்டு முறை அமைச்சர்கள் குழு டாக்டர் ராமதாசை சந்தித்து பேசியது. பா.ம.க. குழுவினரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.

    தனி இடஒதுக்கீடு தராவிட்டாலும் பரவாயில்லை. மிகவும் பிற்பட்டோருக்கு வழங்கப்படும் 20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்கினால் போதும் என்ற முடிவுக்கு இறங்கி வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எந்த விசயத்திலும் சாதகமான பதில்கள் கிடைக்காததால் பா.ம.க. தரப்பில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு பா.ம.க. நிர்வாக குழு அவசர கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணிக்குள் நிலவும் அதிருப்தி பற்றி விவாதிக்கப்படுகிறது.

    தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் அ.தி.மு.க. தரப்பில் ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். இதுபற்றி நிர்வாக குழுவில் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பா.ம.க.வின் இந்த அதிரடி முடிவு கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கூட்டணியை விட்டு வெளியேறினாலும் தனித்து போட்டியிடவே விரும்புவதாக கூறப்படுகிறது.

    இட ஒதுக்கீடு கேட்டு நடத்தப்படும் போராட்டங்களால் வன்னியர் சமூகத்தில் பா.ம.க.வுக்கு செல்வாககு அதிகரித்து இருப்பதாக கருதுகின்றனர். எனவே வட மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்து களம் இறங்கினால் வெற்றி பெற முடியும் என்று பா.ம.க. மேலிடம் நம்புகிறது.
    Next Story
    ×