search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் லாரிகள்
    X
    தண்ணீர் லாரிகள்

    குடிநீர் ஒப்பந்த லாரிகள் 25-ந்தேதி வேலைநிறுத்தம்: சென்னையில் தண்ணீர் சப்ளை பாதிக்கும் அபாயம்

    வாடகையை அதிகரிக்கக் கோரி வருகிற 25-ந்தேதி முதல் குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
    சென்னை:

    சென்னையில் குழாய் மூலம் குடிநீர் வசதி பெற முடியாதவர்களுக்கு ஒப்பந்த லாரிகள் மூலம் தினமும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    இது தவிர ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தண்ணீர் பெருவோருக்கும் இந்த லாரிகளில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 650 லாரிகள் வாடகை ஒப்பந்த அடிப்படையில் குடிநீர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    சென்னை மக்களுக்கு தினமும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் 32 மில்லியன் லிட்டர் டேங்கர் லாரிகள் மூலம் வழங்கப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகள் அளவு கால் பகுதி குறைக்கப்பட்டுள்ளது.

    குடிநீர் வாரியத்துடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போட்டு இருந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிந்தது. புதிய வாடகையில் ஒப்பந்தம் போடக்கோரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    புதிய பணிக்கான ஆர்டர் மற்றும் வாடகையை உயர்த்தி தர வேண்டும் என குடிநீர் வாரியத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லாததால் வருகிற 25-ந்தேதி முதல் குடிநீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    இதுகுறித்து குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.எஸ்.சுந்தரம் கூறியதாவது:-

    குடிநீர் விநியோகம் செய்யும் டெண்டருக்காக கடந்த ஆகஸ்டு மாதம் அழைத்தனர். ஆனாலும் இதுவரையில் இறுதி செய்யப்படவில்லை. புதிய ஒப்பந்த பணிக்கான ஆர்டருக்காக காத்து இருக்கிறோம்.

    2017-ம் ஆண்டில் அதிக லாரிகள் போட்டி போட்டதால் குறைந்த வாடகை ஒப்பந்தத்திற்கு சம்மதித்தோம். தொடர்ந்து 3 ஆண்டுகள் அதே வாடகையில் இயக்கி வருகிறோம்.

    கோடை மற்றும் கொரோனா பாதிப்பு காலத்திலும் குறைந்த வாடகையில் இயக்குவது எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

    வாரியம் 6 ஆயிரம் லிட்டருக்கு ரூ.450, 9 ஆயிரம் லிட்டருக்கு ரூ.555, 16 ஆயிரம் லிட்டருக்கு ரூ.685 என புதிய வாடகை கொடுப்பதாக கூறுகிறது. அதனை ஏற்க நாங்கள் தயாராக இல்லை. அதனால் நாளை மறுநாள் (25-ந்தேதி) முதல் குடிநீர் லாரிகளை இயக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறுவதால் பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை பாதிக்கக்கூடும். நகரில் பல்வேறு நீரேற்று நிலையங்களில் இருந்து குடிசை மாற்று வாரிய பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், குழாய் இல்லாத பகுதிகளுக்கும் நேரடியாக தண்ணீர் வினியோகம் செய்வதும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×