search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒத்திகையின் போது தமிழக பெண் அதிகாரி தேவிகா செல்வராஜ்.
    X
    ஒத்திகையின் போது தமிழக பெண் அதிகாரி தேவிகா செல்வராஜ்.

    கடலோர காவல் படை அணிவகுப்பை 2-வது முறையாக வழி நடத்தும் தமிழக பெண் அதிகாரி

    டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கடலோர காவல் படை அணிவகுப்பை, தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா செல்வராஜ் 2-வது ஆண்டாக வழி நடத்த இருக்கிறார்.
    சென்னை:

    இந்திய நாட்டின் 72-வது குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு அமர்க்களமாக அரங்கேறும். மத்திய-மாநில அரசுகள் சார்பில் இந்திய கலாசாரத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பெறுவது வழக்கம்.

    அதேபோல நமது நாட்டு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளும் அரங்கேறும். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா காரணமாக டெல்லி ராஜபாதை களைகட்டும்.

    ஒவ்வொரு ஆண்டும் ராணுவ வீரர்கள் நடத்தும் அணிவகுப்புக்கு தலைமை ஏற்கும் அதிகாரிகள் மிகவும் சிறப்புக்குரியவர்களாகவே பார்க்கப்படுவது வழக்கம். பெருமை மிகுந்த ராணுவத் துறையின் அணிவகுப்புக்கு தலைமை தாங்குவோருக்கு தனி மரியாதை எப்போதும் உண்டு.

    அந்தவகையில் சிறப்புக்குரிய இந்தப் பெருமையை கடந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா செல்வராஜ் பெற்றார். குடியரசு தினவிழாவில் கடலோர காவல் படையின் அணிவகுப்புக்கு அவர் தலைமை தாங்கியிருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி இச்சிறப்பை பெறுவது என்பது, அதுவே முதல் தடவையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் 2-வது ஆண்டாக இந்த ஆண்டு குடியரசு தின விழாவிலும், தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா செல்வராஜ் கடலோர காவல்படை அணிவகுப்புக்கு தலைமை தாங்கி வீறுநடை போட இருக்கிறார்.

    பொதுவாகவே குடியரசு தின விழாவில் அரங்கேறும் ராணுவ அணிவகுப்புக்கு பெண் அதிகாரிகள் தொடர்ந்து தலைமை தாங்க அழைக்கப்படுவது அரிது. ஆனால் அந்த தனிச்சிறப்பை தமிழக பெண் அதிகாரி தேவிகா செல்வராஜ் பெற்று, அனைத்து பெண்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்.

    தேவிகா செல்வராஜ், இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் 100 வீரர்கள் பங்கேற்கும் கடலோர காவல் படையினரின் அணிவகுப்பை தலைமை ஏற்று வழி நடத்திச் செல்ல இருக்கிறார். தொடர்ந்து 2-வது ஆண்டாக கடலோர காவல்படை அணிவகுப்புக்கு தலைமை தாங்க இருக்கும் 29 வயது தேவிகா செல்வராஜூக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    பொள்ளாச்சி அருகே மடத்துகுளத்தை சேர்ந்த டி.செல்வராஜ்-பத்மாவதி தம்பதியரின் மகள் தேவிகா. இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார். கடற்படை அதிகாரிகள் பயிற்சி மையம் மற்றும் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய ‘எழிமலா' கடற்படை பயிற்சி மையத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றவர் ஆவார். மேலும் கடற்படை பிரிவில் ஓராண்டு துணை பயிற்சியும் பெற்றுள்ளார்.

    கடந்த 2016-ம் ஆண்டில் கடலோர காவல் படையில் தேவிகா பணியில் சேர்ந்தார். அவரது தனி திறமை காரணமாக குறுகிய காலத்திலேயே முக்கியமான பதவிகளில் இடம் பிடித்தார். அந்தமான் போர்ட் பிளேர் நகரில் உள்ள பிராந்திய கடலோர காவல் படையில் உதவி தலைமை கமாண்டண்ட் அதிகாரியாக பணியாற்றினார். தற்போது குஜராத்தில் கடலோர காவல் படை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
    Next Story
    ×