search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் சங்க மாநில தலைவர் திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையிடம் மனுவை கொடுத்துவிட்டு கோஷமிட்ட காட்சி.
    X
    விவசாயிகள் சங்க மாநில தலைவர் திருச்சியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையிடம் மனுவை கொடுத்துவிட்டு கோஷமிட்ட காட்சி.

    திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுத்து விவசாயிகள் சாலை மறியல் - 65 பேர் கைது

    திருச்சியில் எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுத்துவிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 65 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி நேற்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி கண்டோன்மெண்ட் எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

    முன்னதாக மனு கொடுக்க வந்த விவசாயிகளை போலீசார் கயிறு கட்டி தடுத்தனர். அவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி 2 அல்லது 3 பேர் மட்டும் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மனு கொடுக்க அனுமதிக்கப்படுவர் என்றனர்.

    அதை ஏற்று அய்யாக்கண்ணு மற்றும் சிலர் எம்.ஜி.ஆர். சிலையிடம் மனு கொடுத்து கோஷம் எழுப்பினர். அதே வேளையில் கயிறு தடுப்புக்கு முன்பு நின்ற விவசாயிகள் கோஷம் எழுப்பியபடி எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா அருகே திடீரென்று தடுப்பை மீறி வெளியேறி சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர், சாலையில் படுத்து உருண்டனர்.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 65 பேரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி சீனிவாசா மகாலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    முன்னதாக அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய நஷ்டஈடு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் உதவி செய்வதாக அறிவிக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மழையினால் அழிந்து விட்ட நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், வெங்காயத்திற்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரமும் மற்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரமும் வழங்க கேட்டும் யோசிக்கிறார்.

    ஆகவே, எம்.ஜி.ஆர்.சிலை காலில் விழுந்து, தமிழக முதல்- அமைச்சருக்கு நல்ல சிந்தனையையும், எண்ணத்தையும், கொடுத்து விவசாயிகளுக்கு அழிந்து விட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுகோள் விடுத்துதோம். மேலும் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யுங்கள். 3 வேளாண் சட்டங்களை முதல்-அமைச்சர் எதிர்க்க வேண்டும். எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×