search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரின் முகப்பு விளக்கில் கலெக்டர் மெகராஜ் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியபோது எடுத்தபடம்.
    X
    காரின் முகப்பு விளக்கில் கலெக்டர் மெகராஜ் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியபோது எடுத்தபடம்.

    சாலை பாதுகாப்பு விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

    நாமக்கல்லில் நேற்று சாலை பாதுகாப்பு விழாவையொட்டி பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் மெகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் சார்பில் 32-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் மெகராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்வலம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி சேலம் ரோடு சந்திப்பு, பிரதான சாலை, நாமக்கல் பஸ் நிலையம் வழியாக சென்று பூங்கா சாலையில் முடிவடைந்தது. இதில் சுமார் 350 பெண்கள் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து, சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பாதைகளை எடுத்து சென்று, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை வாகனங்களில் ஒட்டினார். பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 18.1.2021 முதல் 17.2.2021 வரை ஒரு மாத காலம் கடைபிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது குறித்த உறுதிமொழி எடுத்தல், டிரைவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்துதல், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலாசார நிகழ்ச்சிகள் நடத்துதல், சிறப்பு வாகன சோதனைகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, மகளிர் திட்ட அலுவலர் மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரவிச்சந்திரன் (நாமக்கல் வடக்கு), முருகன் (நாமக்கல் தெற்கு), மாதேஸ்வரன் (திருச்செங்கோடு), மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×