search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து கிடப்பதை ஒரு விவசாயி வேதனையுடன் பார்த்ததையும் படத்தில் காணலாம்.
    X
    நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து கிடப்பதை ஒரு விவசாயி வேதனையுடன் பார்த்ததையும் படத்தில் காணலாம்.

    வயல்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

    தண்ணீரில் சாய்ந்து நெற்பயிர்கள் முளைத்துள்ள வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் வதிஷ்டபுரம், கீழப்பெரம்பலூர் பகுதிகளில் வயல்களில் மழைநீர் தேங்கியதால், நெற்பயிர்கள் சாய்ந்து மூழ்கின.

    தற்போது வெயில் அடிக்க தொடங்கியதால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களில் நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. மேலும், வைக்கோல்கள் அழுகிவிட்டன. அவற்றை அறுவடை செய்தாலும் பெரிய அளவில் மகசூல் கிடைக்காது.

    அறுவடைக்காக செய்யும் செலவுத்தொகை கூட கிடைக்காது என்பதால், அவற்றை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுவிட முடிவு செய்துள்ளதாக மிகுந்த மன வேதனையோடு விவசாயிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் ஒருபோகம் சம்பா சாகுபடி செய்தோம். ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்திருந்தோம். நல்ல விளைச்சல் கண்டிருந்தது. பொங்கல் பண்டிகை முடிந்ததும் அறுவடை செய்யலாம் என்று இருந்தோம். ஆனால், அதற்குள் எதிர்பாராதவிதமாக பெய்த தொடர் மழையால் விளைந்த நெற்கதிர்கள் அனைத்தும் வயலில் சாய்ந்தன. வயலில் தண்ணீர் தேங்கியே இருந்ததால் சாய்ந்த பயிர்களில் நெல்மணிகள் முளைத்துவிட்டன.

    இதை அறுவடை செய்தால் கிடைக்கும் மகசூலை விட, கூலிக்கு அதிகம் செலவாகும் என்பதால், இவற்றை வயலில் அப்படியே விட்டுவிடலாம், என்று உள்ளோம். நெல் சாகுபடிக்காக வாங்கிய கடனை எப்படி செலுத்துவது என்று தெரியவில்லை. தமிழக அரசு எங்களின் வயல்களை அதிகாரிகளை கொண்டு கள ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கினால் மட்டுமே நாங்கள் அடுத்த சாகுபடியை மேற்கொள்ள முடியும்' என்றனர்.
    Next Story
    ×