search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக போலீஸ்
    X
    தமிழக போலீஸ்

    தமிழக அளவில் சிறந்த போலீஸ் நிலையம்- சேலம் டவுன் போலீஸ் நிலையம் முதலிடம்

    தமிழக அளவில் சேலம் டவுன் போலீஸ் நிலையம் 5,558 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து, சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    சேலம்:

    தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து அதற்கான விருது வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி கடந்த 2019-ம் ஆண்டிற்கான சிறந்த காவல்நிலையத்தை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்வதற்கு சென்னை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    கடந்த வாரம் அவர் தமிழக அளவில் முதலிடத்தில் இருந்த சேலம் டவுன் போலீஸ் ஸ்டேசனை ஆய்வு செய்தார். இதையடுத்து சிறந்த போலீஸ் ஸ்டேசன் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேலம் டவுன் போலீஸ் ஸ்டே‌ஷன் 5,558 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்து, சிறந்த போலீஸ் ஸ்டேசனாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை டவுன் போலீஸ் ஸ்டேசன் 1418.5 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. சென்னை கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேசன் 1242.35 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அளவில் சிறந்த போலீஸ் ஸ்டேசன் பட்டியலில் சேலம் சூரமங்கலம் மகளிர் போலீஸ் நிலையம் 2-வது இடத்தை பிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றது. தற்போது தமிழக அளவில் சிறந்த போலீஸ் ஸ்டேசனாக சேலம் டவுன் போலீஸ் நிலையம் தேர்வு பெற்றுள்ளது போலீசாரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கான விருதை குடியரசு தினத்தன்று சென்னையில் நடக்கும் விழாவில் வழங்கப்படுகிறது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து டவுன் இன்ஸ்பெக்டர் குமார் இந்த விருதை பெற்றுக்கொள்கிறார்.

    வழக்குகளை விரைந்து முடிப்பது, குற்ற சம்பவங்கள் அதிகரிக்காமல் பார்த்து கொள்வது, பதிவேடுகளை சரியாக பராமரிப்பது, பொது மக்களிடம் நடந்து கொள்ளும் விதம், போலீஸ் நிலையத்தை சுத்தமாக வைத்து கொள்வது ஆகியவைகளை ஆய்வு செய்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தை சுற்றிலும் புல் தரையும், சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    முதலிடம் பெற்றது குறித்து சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் கூறியதாவது:- வழக்குகள் தொடர்பாக போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதம், சிறு, சிறு குற்றங்கள் மற்றும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது, வழக்குகளை விரைந்து முடிப்பது, போலீஸ் நிலையங்களை சுற்றி அழகுபடுத்தி புல் தரை மற்றும் பூங்கா அமைப்பது மற்றும் சுத்தமாக வைத்து கொள்வது, வழக்கு தொடர்பான ஆவணங்களை முறையாக பராமரிப்பது ஆகியவற்றை ஆய்வு செய்து டவுன் போலீஸ் நிலையம் முதலிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது சேலம் டவுன் போலீஸ் நிலையத்தை சேர்ந்த அனைத்து போலீசாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×