search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    சாதி ரீதியான உள்ஒதுக்கீடுக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட்டு உத்தரவு

    மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், சாதி ரீதியாக உள் ஒதுக்கீடு வழங்க தடை கேட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் சாதி வாரியான புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கையாக வழங்க, ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையம் தன்னுடைய அறிக்கையை 6 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவில் கூறியுள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    1983-ம் ஆண்டு சாதிரீதியான கணக்கெடுப்பு நடத்த அம்பாசங்கர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் சாதி வாரியான புள்ளிவிவரங்களை திரட்ட 2 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. 35 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலை என்றால், தற்போது ஜனத்தொகை பெருகி விட்டது. அதனால், 6 மாதங்களுக்கு இந்த விவரங்களை திரட்ட முடியாது.

    மேலும், விரைவில் சட்டசபை தேர்தல் வருகிறது. அதனால், சாதி அடிப்படையிலான சில அரசியல் கட்சிகளின் நிர்பந்தத்தால், இந்த புள்ளி விவரம் அவசர கதியில் திரட்டப்படுகிறது. அதுமட்டுமல்ல சாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகளை திருப்திப்படுத்த, 6 மாதத்துக்குள் இந்த புள்ளிவிவரங்களை திரட்ட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனால், நீதிபதி ஏ.குலசேகரன் ஆணையம், சுதந்திரமாக செயல்பட முடியாமல், தங்களது வேலையை அவசர கதியில் மேற்கொள்ளும். எனவே, இந்த ஆணையத்தை அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில், சாதி ரீதியாக உள்ஒதுக்கீடு வழங்க தடை விதிக்க வேண்டும். சாதி வாரியான புள்ளி விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன், நியாயமான முறையில் திரட்ட உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், ‘‘ஆணையம் தனது பரிந்துரையை அரசுக்கு வழங்காத நிலையில், இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை தள்ளுபடி செய்கிறோம். ஆணையம் அறிக்கை அளித்து, அதை ஏற்று அரசு உத்தரவு பிறப்பித்தால், மனுதாரர் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம்’’ என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×