search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விழுப்புரம் மாவட்டத்தில் 16¾ லட்சம் வாக்காளர்கள் - ஆண்களை விட பெண்களே அதிகம்

    விழுப்புரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 16¾ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் பேர் உள்ளனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் 1.1.2021 தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி கடந்த 16.11.2020 முதல் தொடங்கி 15.12.2020 வரை நடைபெற்றது. இப்பணியின்போது 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர்அண்ணாதுரை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாவட்டத்தில் 16.11.2020 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 519 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 30 ஆயிரத்து 644 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 198 பேரும் என மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 361 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிக்கு பின்னர் 5 ஆயிரத்து 297 ஆண்களும், 4 ஆயிரத்து 980 பெண்களும், மூன்றாம் பாலினத்தினர் 9 பேரும் என 10 ஆயிரத்து 286 பேர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

    அதன் பின்னர் சிறப்பு சுருக்க முறை திருத்தத்தின்படி 20 ஆயிரத்து 984 ஆண் வாக்காளர்களும், 25 ஆயிரத்து 418 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 27 பேரும் ஆக மொத்தம் 46 ஆயிரத்து 429 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 18 வயது, 19 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் 25 ஆயிரத்து 771 பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 206 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 51 ஆயிரத்து 82 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 216 பேரும் ஆக மொத்தம் 16 லட்சத்து 84 ஆயிரத்து 504 பேர் உள்ளனர்.

    இந்த வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர், கோட்டாட்சியர், தாலுகா, நகராட்சி ஆகிய அலுவலகங்களிலும் மற்றும் நியமன வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள பதிவு பெற்ற இணையதள தேடல் மையங்களின் மூலமாகவும், இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விவரத்தை சரிபார்த்துக்கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணி தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களை உரிய படிவத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் கொடுக்கலாம். இதுதவிர பொதுமக்கள் இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில் வேலை நேரங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண் 1950-ஐ தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 25, 27, 29 ஆகிய நாட்களில் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் நடைபெறும் நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய பெயர்களை சேர்க்க, நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பங்களை கொடுக்கலாம். மாற்றுத்திறனாளிகள் என குறியீடு செய்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர். வானூர் தொகுதியில் வாக்காளர் சேர்ப்பு விவரம் 63 சதவீதமாக உள்ளது. அதை இன்னும் உயர்த்த வேண்டும். அதுபோல் இளம் வாக்காளர்களை கண்டறிந்து விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மாவட்டத்தில் தற்போது 1, 957 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 1, 000 வாக்காளர்களுக்கு மேல் ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதால் 1, 000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை 2 வாக்குச்சாவடிகளாக பிரிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கூடுதலாக 512 வாக்குச்சாவடி மையங்கள் தேவைப்படுகிறது. இதனை அமைக்க வாக்காளர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் தற்போதுள்ள வாக்குச்சாவடி மையங்களிலேயே இடமிருக்கும் பட்சத்தில் அங்கேயே கூடுதல் கட்டிடத்தில் வாக்குச்சாவடி அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.

    எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப்பணி நல்ல முறையில் நடைபெற அரசியல் கட்சியினர் தேவையான ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார். அப்போது கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜலட்சுமி, விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தேர்தல் தனி தாசில்தார் சீனிவாசன் மற்றும் தி.மு.க. அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், துணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை, பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் சுகுமார், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், காங்கிரஸ் நகர தலைவர் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×