search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குளித்தலை அருகே விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

    குளித்தலையில், மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்ததையடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    குளித்தலை:

    குளித்தலை பகுதியில் இந்த மாதம் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற் பயிர்கள் அடியோடு சேதமடைந்து விட்டன. தற்போது விவசாயத்திற்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். எனவே தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் தென்கரை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சார்பில் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் குளித்தலை சப்-கலெக்டர் சேக் அப்துல்ரகுமானிடம் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுவை அவர்கள் வழங்கினார்கள்.

    இதேபோல் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோகைமலையில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தின் முன்பு தமிழக விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விவசாய சங்கமாநில குழு உறுப்பினர் இலக்குவன், மாவட்ட செயலாளர் சக்திவேல், தோகைமலை ஒன்றிய பொருளாளர் முனியப்பன், ஒன்றிய துணைத் தலைவர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
    Next Story
    ×