search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    உப்பளங்களில் தேங்கிய மழைநீரால் ஆயத்த பணி தாமதம்- தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி பாதிப்பு

    தூத்துக்குடியில் பெய்த மழையால் பல்வேறு இடங்களிலும் இன்னும் வெள்ளம் வடியாமல் உள்ளது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    முள்ளக்காடு:

    முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 20 லட்சம் டன் வரை தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழையகாயல் உள்பட பகுதிகளில் ஊர்களில் ஏறத்தாழ 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த தொழிலில் 400 சிறிய உற்பத்தியாளர்களும், ஏறத்தாழ 100 பெரிய உற்பத்தியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். உப்பளத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    பொதுவாக வெயில் காலங்களில் உப்பு உற்பத்தி மும்முரமாகவும், மழை காலங்களில் தொய்வும் ஏற்படும். அதன்படி ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை அதிகளவு உற்பத்தி நடைபெறும். வழக்கமாக டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை முடிந்த உடன் ஜனவரியில் உப்பு உற்பத்தி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கனமழை கொட்டித் தீர்த்தது.

    இதன் காரணமாக தூத்துக்குடியில் பல்வேறு இடங்களிலும் இன்னும் வெள்ளம் வடியாமல் உள்ளன. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உப்பு உற்பத்தியும் தொடங்கவில்லை.

    இது குறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    வழக்கமாக ஜனவரி மாதம் உப்பு உற்பத்தியை தொடங்கி விடுவோம். ஆனால் இந்த ஆண்டு பருவம் தப்பிய மழையால் தற்போது உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் உற்பத்தியை தொடங்க முடியவில்லை.

    மழை வெள்ளம் முழுவதும் வடிந்த பின்னரே அதற்கான வேலைகள் தொடங்கும். அடுத்த மாதம் உப்பளங்களை சீரமைத்து ஆயத்த பணிகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் தான் உப்பு உற்பத்தி தொடங்கும். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படும். ஆனால் கடந்த ஆண்டு தாமதமாக வடகிழக்கு பருவமழை பெய்ததால் 22.50 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது.

    இதில் 18.50 லட்சம் டன் உப்பு ஏற்மதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 4 லட்சம் டன் உப்புகள் இருப்புகள் உள்ளது. தற்போது ரூ. 2 ஆயிரம் வரை டன்னுக்கு விற்கப்படுகிறது.மழை காரணமாக தாமதமான உப்பு உற்பத்தியை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதில் தடை ஏற்பட்டால் வரத்து இல்லாததால் சந்தைகளில் உப்பின் விலை மேலும் உயரும் நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×