search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தடுப்பூசி போடுவதற்கு 47 சதவீதம் பேர் தயக்கம் - 40 சதவீதம் இலக்கையே எட்ட முடிந்தது

    தமிழகத்தில் 47 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டப்பட்டுள்ள நிலையில் 40 சதவீதம் இலக்கையே எட்ட முடிந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    சென்னை:

    கொரோனா தடுப்பூசி கடந்த 16-ந் தேதி முதல் நாடுமுழுவதும் போடப்பட்டு வருகிறது.

    நேற்று 5-வது நாளாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. நேற்று வரை நாடு முழுவதும் சுமார் 7 லட்சத்து 86 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

    சில மாநிலங்களில் மட்டுமே தடுப்பூசியை முன்களப்பணியாளர்கள் ஆர்வமுடன் போட்டு வருகிறார்கள். தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி மந்தநிலையில் நடந்து வருகிறது.

    தமிழகத்தில் நேற்று 5-வது நாளாக நடந்த தடுப்பூசி போடும் பணியில் 17 ஆயிரத்து 100 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 7 ஆயிரத்து 762 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    தமிழ்நாட்டில் நேற்று வரை முதல் 5 நாட்களில் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட சுகாதாரத்துறை சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று மாலை வரை 33 ஆயிரத்து 670 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இது மொத்த இலக்கில் 40 சதவீதமே ஆகும். சுமார் 60 சதவீதம் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மந்த நிலையிலேயே உள்ளது. என்றாலும், தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னையில் மேலும் 2 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. எனவே வரும் நாட்களில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்படுவது தொடர்பான சர்வே ஒன்று நடத்தப்பட்டது. 2,819 பேரிடம் தடுப்பூசி போட்டுக் கொள்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதில் 47 சதவீதம் பேர் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

    42 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசியை உடனே எடுத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்தனர். 11 சதவீதம் பேர் 3 மாதம் கழித்து தடுப்பூசி போட்டுக் கொள்வதாக கூறினார்கள்.

    இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் இல்லை என்று தெரியவந்துள்ளது.

    Next Story
    ×