search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

    ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கம்ப்யூட்டர்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பழைய கட்டிடம் பகுதியில் முதன்மை கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது.

    இந்த அலுவலகத்தில் நேற்று மாலை பணி நேரம் முடிந்து அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். இரவு நேர வாட்ச்மேன் பழனி என்பவர் மட்டும் பணியில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் திடீரென நள்ளிரவு ஒரு மணியளவில் தீ பற்றி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இரவு காவலர் உடனடியாக பக்கத்தில் இருந்த தீயணைப்பு நிலையத்திற்கு ஓடிச்சென்று தகவல் தெரிவித்துள்ளார்.

    அதனை தொடர்ந்து ராமநாதபுரம் தீயணைப்பு அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு அலுவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    தீ எரிந்ததில் பக்கத்தில் உள்ள ஊராட்சி தணிக்கை அலுவலகத்திலும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாமல் தவித்தனர் அதன் பின்னர் உள்ளே நுழைந்து இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    அதற்குள் அலுவலகத்தில் பல ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் அலுவலகத்தின் கணினிகள் போன்றவை தீயில் எரிந்து சேதம் அடைந்தாக கூறப்படுகிறது.

    தகவல் கிடைத்ததும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக நடந்ததா? அல்லது முக்கிய ஆவணங்கள் மறைப்பதற்காக தீ வைத்து எரிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த தீ விபத்து சரியான நேரத்தில் தெரிய வந்ததால் சேதங்கள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர் உட்பட பல்வேறு சாதனங்கள் சிறிய அளவில் சேதமடைந்துள்ளது. மற்றபடி முக்கிய ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது.

    இது சம்பந்தமாக தீப்பிடித்த பகுதிகளில் ஆவணங்கள் எதுவும் எரிந்துள்ளதா? என்று அலுவலர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

    மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் இதுகுறித்து ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது என்றார்.

    இந்த அலுவலகத்திற்கு அருகே உள்ள ஊராட்சி நிதி தணிக்கை அலுவலகத்திலும் தீ விபத்து நடந்துள்ளது. அங்கும் ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×