search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட 5 கொள்ளையர்கள்
    X
    கைது செய்யப்பட்ட 5 கொள்ளையர்கள்

    குமரியில் போலீஸ் சீருடையில் காரை வழிமறித்து ரூ.76¼ லட்சம் வழிப்பறி கொள்ளையில் 5 பேர் கும்பல் கைது

    தக்கலை அருகே போலீஸ் சீருடையில் வந்து காரை வழிமறித்து ரூ.76¼ லட்சம் வழிப்பறி செய்த சம்பவத்தில் கார் டிரைவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பத்மநாபபுரம்:

    மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் சம்பத். இவர் கேரளாவில் நெய்யாற்றின்கரை பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். மேலும், தங்கத்தை கட்டிகளாக வாங்கி, தமிழகத்தில் உள்ள பல நகைகடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். இவரது கடையில் நெய்யாற்றின்கரையை சேர்ந்த கோபகுமார் (வயது 37) என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சம்பத், கடையில் வேலை செய்யும் 2 பேரிடம் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் தங்க கட்டிகளை கொடுத்து பணத்தை வாங்கி வரும்படி தெரிவித்தார். அதன்படி அவர்கள் 2 பேரும் காரில் புறப்பட்டனர். காரை கோபகுமார் ஓட்டினார்.

    பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் போலீசார் உள்ளனர்.

    இவர்கள் 3 பேரும் நாகர்கோவில் வந்து தங்க கட்டிகளை கடையில் கொடுத்து விட்டு ரூ.76 லட்சத்து 40 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் நெய்யாற்றின்கரை நோக்கி புறப்பட்டனர்.

    தக்கலை அருகே குமாரகோவில், காரவிளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் காரில் வந்த 4 பேர் திடீரென நகை கடை ஊழியர்கள் சென்று கொண்டிருந்த காரை வழிமறித்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூ.76 லட்சத்து 40 ஆயிரத்தை போலீஸ் போல் நடித்து கொள்ளையடித்து விட்டு சென்றனர். அவர்களில் 2 பேர் போலீஸ் சீருடையில் இருந்தனர். மற்றவர்கள் சாதாரண உடையில் இருந்துள்ளனர்.

    இதுகுறித்து நகை கடை உரிமையாளர் சம்பத்துக்கு, பணத்தை பறிகொடுத்த ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அவர் தக்கலை போலீசில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதாவது, டிரைவர் கோபகுமாரின் சதி திட்டத்தில் இந்த வழிப்பறி கொள்ளை அரங்கேறியது அம்பலமானது.

    டிரைவர் கோபகுமார் பல இடங்களுக்கு தங்க கட்டிகளை கொண்டு சென்று விற்றுவிட்டு பணத்தை முதலாளியிடம் ஒப்படைப்பது வழக்கம். இதற்கிடையே குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட அவர் முதலாளிக்கு துரோகம் செய்ய திட்டமிட்டார்.

    இதற்காக நெய்யாற்றின்கரையை சேர்ந்த தனது நண்பர்கள் சுஜின்குமார் (37), ராஜேஷ்குமார் (40), சுரேஷ்குமார் (34), கண்ணன் (29) ஆகியோருடன் சேர்ந்து தங்க கட்டியை விற்று வரும் பணத்தை எவ்வாறு கொள்ளையடிக்கலாம், அதில் தான் மாட்டிக் கொள்ளாமல் இருக்க என்ன செய்யலாம் என கோபகுமார் அவர்களுடன் திட்டத்தை வகுத்தார்.

    அதன்படி சம்பவத்தன்று நடந்த விவரத்தை டிரைவர் கோபகுமார், நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நண்பர்கள் காட்டாக்கடை பகுதியில் இருந்து ஒரு காரை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் போலி நம்பர் பிளேட் பொருத்திவிட்டு 2 பேர் கேரள போலீஸ் சீருடை அணிந்த நிலையில் நகை கடை ஊழியர்கள் சென்ற காரை பின் தொடர்ந்துள்ளனர். பணத்தை வாங்கி விட்டு சென்ற போது ஏற்கனவே திட்டமிட்டப்படி காரை வழிமறித்து பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர், டிரைவர் கோபகுமார் தனக்கு எதுவும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கி கொண்டார்.

    இதையடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட கோபகுமார், அவரது கூட்டாளிகளான சுஜின்குமார், ராஜேஷ்குமார் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.76 லட்சத்து 40 ஆயிரத்தையும் போலீசார் கைப்பற்றினர். கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×