search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    பொங்கல் கொண்டாட சொந்த ஊர் சென்ற 3 பேரின் வீடுகளில் 32 பவுன் நகைகள், பணம் திருட்டு

    மதுரையில் பொங்கல் பண்டிகை கொண்டாட சென்ற 3 பேரின் வீடுகளில் 32 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருடு போனது.
    மதுரை:

    மதுரை தத்தனேரி, கீழவைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 65). அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற என்ஜினீயர். தனது சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாட இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்றார். பொங்கல் கொண்டாடி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து அவர் செல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.

    அங்கு பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த 23 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது. தகவல் அறிந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் 2 வீடுகளில்..

    மதுரை தெப்பக்குளம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் செல்வபாண்டி (42). பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட இவரும் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார். நேற்று அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மேலூர் மெயின் ரோடு, லேக் ஏரியா 2-வது தெருவை சேர்ந்தவர் ஜவகர் ரவீந்திரன் (55). இவரும் பொங்கல் பண்டிகைக்காக குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் பீரோவில் இருந்த ரூ.11 ஆயிரத்து 500, ஒரு பவுன் தோடு, மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இந்த சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க போலீசார் இரவு நேர ரோந்துப்பணியை தீவிரப்படுத்த போலீஸ் நிர்வாகம் அறிவுறுத்திட வேண்டும்.
    Next Story
    ×