search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின்

    புதுவை காங்கிரஸ்-திமுக கூட்டணியில் குழப்பம் இல்லை: மு.க.ஸ்டாலின் விளக்கம்

    புதுவை காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    சென்னை:

    புதுவை மாநிலத்தில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    தமிழக சட்டசபை தேர்தலோடு சேர்ந்து புதுவையிலும் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகம், புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அது பாராளுமன்ற தேர்தலிலும் நீடித்தது.

    வருகிற சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தொகுதி பங்கீடுகள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது.

    ஆனால் புதுவையில் அரசியல் சூழ்நிலை வேறு மாதிரி நிலவுகிறது. அங்கு இந்த தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    புதுவை மாநில தி.மு.க. வினருக்கும், காங்கிரஸ் அரசுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவுகிறது. அரசை தி.மு.க. தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நாங்கள் தனித்து போட்டியிடுவோம். அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைப்போம் என்று பேசி வருகின்றனர்.

    இந்தநிலையில் தி.மு.க.வை வலுப்படுத்தும் வகையில் ஜெகத்ரட்சகன் எம்.பி.யை புதுவை தி.மு.க. பொறுப்பாளராக அறிவித்தது.

    ஜெகத்ரட்சகனின் சொந்த ஊர் புதுவை அருகே உள்ள வழுதாவூராகும். அவரது பல்வேறு தொழில்களும் புதுவையில் உள்ளன. எனவே அவருக்கு புதுவை மக்களோடு அதிக தொடர்புகள் உண்டு.

    ஜெகத்ரட்சகனை பொறுப்பாளராக அறிவித்ததால் தி.மு.க. ஏதோ ஒரு திட்டத்துடன் அவரை களம் இறக்கி இருப்பதாக பேசப்பட்டது.

    பொறுப்பாளர் பதவியை ஜெகத்ரட்சகன் ஏற்கும் நிகழ்ச்சி நேற்று புதுவையில் நடந்தது. இதற்காக தி.மு.க.வினர் பிரம்மாண்ட பேரணியையும் நடத்தினார்கள். பின்னர் அங்குள்ள ஓட்டலில் கூட்டம் நடத்தப்பட்டது.

    அதில் பேசிய வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், ஜெகத்ரட்சகனை தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்தார்.

    மேலும் இந்த கூட்டத்தில் பேசிய ஜெகத்ரட்சகன் 30 தொகுதிகளிலும் தி.மு.க. தனித்து போட்டியிடும். அனைத்து தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும் என்று கூறினார்.

    காங்கிரசுடன் கூட்டணி இருக்கும் நிலையில் ஜெகத்ரட்சகனை முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்ததும், 30 தொகுதியிலும் தனித்து போட்டி என்று கூறியதும் கூட்டணியில் சர்ச்சையை உருவாக்கியது.

    அப்படியானால் புதுவையில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி அமைக்காது என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. மேலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் என ஜெகத்ரட்சகனை குறிப்பிட்டதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வர இனி தி.மு.க. ஒத்துழைப்பு கொடுக்காது என்பதும் உறுதியானது.

    இது புதுவை காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கியது.

    இதுசம்பந்தமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது புதுவை மாநில அரசியல் என்பது வேறுபட்டது. புதுவையில் கட்சியின் நடவடிக்கைகளை மேம்படுத்தி கட்சியை வலுவாக்குவதற்காக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் ஜெகத்ரட்சகனிடம் இந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

    இது கட்சிப்பணிதானே தவிர தேர்தல் பணி அல்ல. புதுவை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
    Next Story
    ×