search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டயர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ கொழுந்து விட்டு எரிவதில் கரும்புகை வெளியேறுவதை படத்தில் காணலாம்.
    X
    டயர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ கொழுந்து விட்டு எரிவதில் கரும்புகை வெளியேறுவதை படத்தில் காணலாம்.

    டயர் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து- பல லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்

    கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 4 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான வாகன டயர் உற்பத்தி தொழிற்சாலை கடந்த 3 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளார்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இதில் வடமாநில தொழிலாளர்களே அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில், மோட்டார் சைக்கிள், கார் மற்றும் கனரக வாகனங்களுக்கான டயர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. டயர் உற்பத்தி செய்யும் இடத்தையொட்டி தனியாக உள்ள குடோன் ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட டயர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் நேற்று காலை 8:30 மணியளவில் விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த டயர் சேமிப்பு குடோனில் இருந்து திடீரென புகை கிளம்பியது. அதைத்தொடர்ந்து, ஏற்பட்ட தீ மள மளவென பரவிய நிலையில், கரும்புகையால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகமே இருண்டு காணப்பட்டது.

    தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயின் காரணமாக அப்பகுதி தகிக்கும் கடுமையாக வெப்பமாக தென்பட்டது. இது குறித்து தகவலறிந்து கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய், பொன்னேரி ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர்.

    மேலும் 10-க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் லாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

    இந்த தீ விபத்து ஏற்பட்டதும் தொழிற்சாலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் சம்பவ இடத்தில் தீ பிடிக்காத எஞ்சிய டயர்களை அப்புறப்படுத்தும் பணியில் சில வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இதனைக்கண்ட போலீசார், உயிர் சேதத்தை தவிர்க்கும் பொருட்டு லேசான தடியடி நடத்தி அந்த தொழிலாளர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். சம்பவ இடத்தில் பொன்னேரி ஆர்.டி.ஓ. செல்வம், கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி ஆகியோர் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீ தடுப்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

    கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் மேற்கண்ட தொழிற்சாலைக்கு செல்லும் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்தி அப்பகுதிக்கு சீல் வைத்தனர்.

    சுமார் 4 மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகன டயர்கள் எரிந்து உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசாரின் விசாரணையில் தான் தெரிய வரும் என தீயணைப்பு துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 2 சமையல் எரிவாயு சேமிப்பு கிடங்கு மற்றும் 10-க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் உள்ள நிலையில், தீயணைப்பு வீரர்களின் சாதுர்ய முயற்சியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×